பட்டப்படிப்பை நிறைவு செய்த வைத்தியர்களுக்கு டக்ளஸ் விடுத்துள்ள கோரிக்கை
வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்பு குறைந்தது மூன்று வருடங்களாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்.(Jaffna) போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
யாழில் பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலை
மேலும் உரையாற்றிய அமைச்சர்,
“நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் மற்றும் கர்பிணிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் இரண்டு, கற்பவதிகளுக்கான விடுதிகள் இரண்டு, பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப்பெற்றுள்ளது.
மேலும், சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின் பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த திட்டம் கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம்
இதேவேளை, ஜனாதிபதியினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையை தேசியவைத்தியசாலை மாற்றுமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது.
எனினும், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்த உரையடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டு இருக்கின்றார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன்.
அத்துடன், அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையை இட்டு அவருக்கு நான் எமது மக்களுடைய சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |