தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சுமந்திரனின் நிலைப்பாடு : யோதிலிங்கம்
தமிழரசு கட்சி(ITAK) சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் நிலைப்பாடு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் இடம் பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழரசு கட்சியில், சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒரு மோசமான செயற்பாடு, மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனக்கு சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் சுமந்திரன் மும்முரமாக இருந்துள்ளார்.
ஏற்கனவே மாவை சேனாதிராஜாவை மாற்றவேண்டும் என்றால் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என்றால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறீதரன் இருக்கின்றார். அவரை தலைவராக தெரிவு செய்வதுதான் ஒரு அறநெறிக்கு உட்பட்டதாகும், அதை விடுத்து அதைப்பற்றி எதுவுமே பேசாமல் இன்றைக்கு சி.வி.கே. சிவஞானம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
இது தமிழரசு கட்சியில் சுமந்திரன் பிரிவினருக்கு எதிராக இருக்கின்றவர்களை அகற்றி சிறீதரனை தனிமைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கை உள்வாரியாக இடம் பெறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன். இன்னும் கொஞ்சக்காலத்தில் சிறீதரன் தனிமைப்பட்டுப் போக சிறீதரனுக்கு எதிராக ஒரு ஒழுக்காற்று தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கூட பறிக்கக்கூடிய ஒரு நிலை இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
குறைந்தது ஆறு மாதத்திற்குள் சுமந்திரன் சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கி அல்லது தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சத்தியலிங்கத்தை பதவியிலிருந்து விலக சொல்லி தான் அதற்கூடாக நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.
இன்னொரு பக்கமாக சுமந்திரன் ஊடக பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே சிறினேசன் ஊடக பேச்சாளராக இருக்கின்றார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார்.
தற்போது புதிதாக கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்றும், நாடாளுமன்றத்தின் ஊடக பேச்சாளராக சிறிநேசன் இருப்பாரென்றும் கூறப்படுகிறது. ஒரு கட்சிக்கு ஏன் இரண்டு ஊடக பேச்சாளர்கள், ஒரு கட்சிக்கு ஒரு ஊடக பேச்சாளர் போதுமானதே. சுமந்திரனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன்.
தமிழரசு கட்சியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மாவை சேனாதிராஜா தான் என சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.மாவை சேனாதிராஜா மீது விமர்சனங்கள் இருக்கின்றன என்பது உண்மை, ஆனால் இந்த போக்குகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் சுமந்திரன் தான் என்பது உண்மையாகும்.
தமிழரசு கட்சி
இதிலே தமிழரசு கட்சி என்பது ஒரு பாரம்பரிய கட்சி, அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, அதற்கு வடக்கு கிழக்கு கட்டமைப்பு இருக்கிறது. அது பலவீனப்பட்டு செல்வது தமிழ் அரசியலை பலவீனப்படுத்துவது தமிழ் அரசியலை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். ஆகவே தமிழரசு கட்சியை பாதுகாக்கின்ற நடவடிக்கையை கட்சிக்காரர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஆகவே வெளியிலிருந்து மக்கள் ஒரு பலமான அழுத்தத்தை கொடுப்பதன் ஊடகவே இதனை முன்னேற்ற முடியுமென நான் கருதுகின்றேன். அதிலிருந்து நாம் தவறுவோமாகவிருந்தால் நாம் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடி ஒரு சூழல் வரலாம் என்பதே எனது நிலைப்பாடு.
இந்தப் போக்கை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போகிறார்களா என்பதுதான் எனது கேள்வி. இதில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் இது ஒரு கொள்கைப் பிரச்சினை. தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய அரசியலும் இதுவரை பின்பற்றிய அரசியலை கைவிட்டு இன்னோர் அரசியலை கொண்டு செல்வதற்க்காக குறிப்பாக இறைமை அரசியலை கைவிட்டு ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் ஒரு அரசியலை கொண்டு செல்வதற்கும், இணக்க அரசியலை கொண்டு செல்வதற்காகவும் சுமந்திரன் இந்த வேலையை செய்கிறார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் ஏன்பதே எனது நிலைப்பாடாகும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |