புதிய ஆண்டைத் திட்டமிடுவது..!
இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்து தான் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டு என்ன கிடைத்தது? இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது, ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றார். கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டலாம் என்ற முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியது.
மூன்றாவது, நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்மக்கள் மத்தியில் இருந்தும் என்பிபிக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் தமிழ்மக்கள் தங்களை இலங்கையராகச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று என்பிபியின் தமிழ் ஆதரவாளர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள்.
நாலாவது, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக மேலும் மெலிந்து போயிருக்கிறார்கள். ஐந்தாவது, தமிழ்த் தேசியவாதம் பேசும் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை தங்களைக் கட்சிகளாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை. ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியானது நீதிமன்றத்தில் நிற்கிறது.
ஜனாதிபதி தேர்தல்
எனவே, ஒரு கட்சியாக அது தோல்வியடைந்து விட்டது. ஆனால் தமிழ்மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களித்திருக்கிறார்கள். இவை தான் இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்தவற்றுள் முக்கியமானவை.
இவற்றின் தேறிய விளைவுகளே வரும் ஆண்டைத் தீர்மானிக்கும். தமிழ் மக்கள் ஒரு தேசமாக நாடாளுமன்றத்தில் மெலிந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில் மூன்றில்இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கும் என்.பி.பி அரசாங்கம் இனப்பிரச்சினையை எப்படி அணுகும்? பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்”
இந்தியாவால் அறிமுகப்படுத்தப்படட அதிகாரப் பரவலாக்கல் உரையாடலையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகின்றது. ஐநாவின் முகவரமைப்புக்களினாலும் உள்ளூர் மற்றும் உலகளாவிய மனித உரிமைக் குழுக்களினாலும் ஊக்குவிக்கப்படும் முரண்பாடுகளுக்கான தீர்வு, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கான லிபரல் போக்குடைய சமாதான உரையாடல்களையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகிறது.”
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை பிராந்திய மற்றும் சர்வதேச மயநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று உயாங்கொட கூறுகிறார்.
அதேசமயம் அண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி அநுர அங்கு பின்வருமாறு பேசியிருக்கிறார்.”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு போதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.”அதாவது தமிழ் மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று ஜனாதிபதி கூறுகிறார். அதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணை தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூற வருகிறார்.
அவருடைய இந்திய விஜயத்தின் போது இந்தியா உத்தியோகபூர்வமாக 13ஆவது திருத்தத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. பதிலாக யாப்பை முழுமையாக நிறைவேற்றுமாறு தான் கேட்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களை வைக்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது.13இன் மீதான அழுத்தத்தை இந்தியா குறைத்திருப்பது ஒரு கொள்கை மாற்றமாக ஒரு பகுதி ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் கடந்த 15ஆண்டுகளிலும் இந்தியா 13ஐ அழுத்திக் கூறிவந்தாலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்த தேவையான அழுத்தங்களை கொழும்பின் மீது பிரயோகித்திருக்கவில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் தொடர்பான பயம் சிங்களத் தலைவர்களுக்கு எப்பொழுதோ இல்லாமல் போய்விட்டது.
நாட்டில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னமானது சிங்களத் தலைவர்களின் பேர பலத்தை கூட்டியிருக்கிறது என்பதே உண்மைநிலை. கொழும்பை இறுக்கிப் பிடித்தால் அது சீனாவை நோக்கிச் சாய்ந்துவிடும் என்று ஏனைய தரப்புகள் பயப்படுவதை சிங்களத் தலைவர்கள் தமக்குரிய பேர வாய்ப்பாகக் கருதுகிறார்கள்.
தேர்தல் முடிந்த கையோடு வடக்கு கிழக்குக்கு வந்த முதலாவது தூதுவர் சீனத் தூதுவர்தான். அவர் வழமையாக தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடுவதில்லை.
ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக யாழ். ஊடக அமையத்தில் உரையாற்றும்போது தேர்தல் முடிவுகளை வரவேற்றுக் கதைத்திருக்கிறார். குறிப்பாக தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை அவர் பாராட்டியிருக்கிறார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
அதன்மூலம் அவர் சொல்லாமல் சொல்ல வருவது என்னவென்றால், தமிழ்மக்கள் என்பிபி அரசாங்கத்தை நம்புகிறார்கள், எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவோ, ஐநாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ, அமெரிக்காவோ தலையிடுவதற்கான தேவைகள் குறைந்துவிட்டன என்பதுதான்.
இவ்வாறு பேராசிரியர் உயாங்கொடவும் சீனத்தூதுவரும் கூறியவற்றைத் தொகுத்துப்பார்த்தால் கிடைக்கும் சித்திரம் மிகத்தெளிவானது. இனப்பிரச்சினையை பிராந்திய மயநீக்கம் அல்லது சர்வதேச மயநீக்கம் செய்ய முற்படும் சக்திகள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உற்சாகமடைந்திருக்கின்றன. ஆனால்,தேசிய இனப்பிரச்சினைகள் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல.
அவை சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள் தான். உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றின் மீது வெளிச்சக்திகள் தலையீடு செய்யும் போதே தேசிய இனப்பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.எனவே எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளுக்கும் அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.
உள்நாட்டுத் தீர்வு கிடையாது. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரையிலும் அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
ஆனால், கடந்த 15ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால், தமிழ்த் தரப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு பின்னணியில், மூன்றாவது தரப்பை இனப்பிரச்சினையில் இருந்து நீக்குவது ஒப்பீட்டளவில் இலகுவாகி வருகிறது.
அதாவது, பேச்சுவார்த்தக்கான தமிழ்த் தரப்பின் பேரபலம் குறைந்து வருகிறது என்பதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதேவிதமான தேர்தல் முடிவுகள் கிடைத்தால் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக மேலும் பலவீனப்படுவார்கள்.
அந்த வெற்றி தரும் உற்சாகத்தில் அரசாங்கம் ஒரு புதிய யாப்புக்கான தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட முடியும். எனவே, இன்னும் சில மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், தமிழ்த் தரப்பு இப்பொழுதே திட்டமிட வேண்டும்.
தேர்தல் அறிவிக்கும் வரை காத்திருந்து தேர்தல்கால ஐக்கியங்களுக்கு போவதைவிடவும் தேர்தலுக்கு முன்னரே தமிழ்மக்கள் தங்களை ஐக்கியப்படுத்த வேண்டும். இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், தேர்தல் தேவைகளுக்காக ஐக்கியத்தை உருவாக்காமல் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கியத்தை, தேசத்தைத் திரட்டுவதற்கான ஐக்கியத்தைக் குறித்து தமிழ்க்கட்சிகள் சிந்திக்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான சிவில் சமூக யதார்த்தத்தின் படி கட்சிகளை அவ்வாறு ஒன்றிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தெரிகின்றன. கட்சிகள் தங்களாக ஐக்கியப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீர்வை நோக்கிய ஐக்கியத்துக்கான முன்னெடுப்புகளைப் பார்க்கவேண்டும்.
அது ஒரு சுடலை ஞானம் தான். தேசமாக மெலிந்த பின் ஏற்பட்ட ஞானம். எனினும்,தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி சிந்திக்குமாக இருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் வளர்ந்துவரும் உட்பகையானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஐக்கியத்திற்கான அழைப்பை சவால்களுக்கு உட்படுத்தும்.
தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்த அழைப்பை வரவேற்பவைகளாக இல்லை. சுமந்திரன் இப்பொழுதும் கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர் போலவே காணப்படுகிறார்.
சிறீதரன் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதவராகவும் காணப்படுகிறார். எனவே தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவ முரண்பாடானது, புதிய யாப்புருவாக்க முயற்சிகளிலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. முன்னணியின் ஐக்கிய முயற்சிகளின் அடுத்த கட்டமானது, தமிழரசுக் கட்சியின் தலைமையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதிலும் தங்கியுள்ளது.
தமிழரசியலின் சீரழிவு
அது மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஒரு கூட்டாக என்ன முடிவை எடுக்கப்போகிறது? ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த்தேசியப் பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்களை ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள சில கட்சித் தலைவர்கள் நீக்குமாறு கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் கூறிய காரணம் பேரவைக்குள் தாங்கள் இருக்கவில்லை என்பதாகும். இப்படிப்பட்டதோர் பின்னணியில், தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எந்தளவு தூரம் வெற்றி பெறும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற்றாலும் அது தேசத்தை திரட்டுவதற்கான ஒரு முழுமையான ஐக்கியமாக இருக்கமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் அத்தகையதே. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாக, பக்தர்களாக, வெறுப்பர்களாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.
அவ்வாறு பிரித்து வைத்திருந்ததன் தோல்விகரமான விளைவுகளினால் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஓர் ஐக்கியத்துக்கு போக முயற்சிக்கக்கூடும். ஆனால் அதுமட்டும் தேசத்தைத் திரட்ட உதவாது. அது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.
தமிழ்ப்பொது வேட்பாளரை முன்நிறுத்திக் கிடைத்த அனுபவம் அதுதான். எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலும் தமிழரசியலின் சீரழிவைக் காட்டின.
எனினும், செப்டெம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் கடந்த 15ஆண்டுகால தமிழ் அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. தமிழ்மக்கள் எப்பொழுதும் தேசமாகத் திரள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி. அதுதான் இந்த ஆண்டின் நற்செய்தியும் கூட. அந்த நற்செய்தியில் இருந்து திட்டமிட்டால் அடுத்த ஆண்டை ஒரு வெற்றி ஆண்டாக மாற்றலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 30 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.