லண்டனில் இருந்து வந்த பொதி - முகநூல் நண்பரை நம்பி ரூ. 8 இலட்சம் இழந்த தமிழ் பெண்..!
மட்டக்களப்பில் முகநூலில் மூன்று நாட்கள் பழகிய நபர் வெளிநாட்டிலிருந்து பொதி அனுப்புவதாகக் கூறியதை நம்பிய பெண்ணொருவர் சுமார் 8 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 13ஆம் திகதி முதல் முகநூல் ஊடாக லண்டனில் வசிப்பதாகத் தெரிவித்த டான் என்ற வைத்தியருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.
3 நாட்களுக்கு பின் வந்த அழைப்பு
அதன் பின்னர், கடந்த 16ஆம் திகதி, குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட நபர் ஒருவர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.

அவர், லண்டனில் இருந்து வைத்தியர் டான் அனுப்பிய பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பொதியை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க 87 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கொன்றிற்கு செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை நம்பிய பெண், கடந்த 17ஆம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
தொலைபேசி செயலிழப்பு
பின்னர், மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து, மொத்தமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னரும் மேலும் 1 இலட்சம் ரூபாய் செலுத்துமாறு மோசடி கும்பல் கோரிய நிலையில், சந்தேகமடைந்த பெண், "இனிமேல் பணம் வழங்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நபர்களின் தொலைபேசி எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதிகள் அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் இணையவழி மோசடிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, தெரியாத நபர்களை நம்பி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்