போராட்டத்தில் குதிக்கின்றது தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணி
தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழின இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்படவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு, எமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, தமிழ் முஸ்லீம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ,சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரை வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சின் இளைஞர் அணி ஆதரவு வழங்கும் என்பதுடன் குறித்த போராட்டத்தில் வடகிழக்கில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி இளைஞர் அணி அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுடன் பயணிக்கும் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள்.