உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்
உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கமும் மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையமும் இணைந்து இரண்டு நாள் நிகழ்வுகளாக மாதம் 29ம் 30ம் திகதிகளில்பிரித்தானியாவில் அமைந்துள்ள, உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் "உயிர்க்கொடை உத்தமர்கள்" நினைவுகள் சுமந்த நினைவு நாள் நடத்தப்பட்டது.
நிகழ்வின் இரண்டாம் நாளான 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச ரீதியாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பேராளர்கள், கல்விமான்கள், தொழில் சார் நிபுணர்கள், மற்றும் உறவுகள் அனைவரும், 1974ம் ஆண்டின் நினைவுகளை மீட்கும் வகையில் தமிழரின் பண்பாட்டு வடிவங்களான பறை இசை, சிலம்பம், இன்னியம், காவடிகளின் அணிவகுப்புடன் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்த உயிர்க்கொடை உத்தமர்களின் நினைவு தூபியின் மாதிரி வடிவத்தினை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
அங்கு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, நினைவுத்தூவிக்கும் 10.01.1974 அன்று படுகொலை செய்யப்பட்டு திருவுருவ படங்களாக வைக்கப்பட்டிருந்த, உயிர் கொடை உத்தமர்களின் நினைவுகளுடன் மலர் வணக்கங்களும் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
மாவீரர் பணிமனை
தொடர்ந்து மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மாதாந்த வணக்க நிகழ்வு நடைபெற்றது. போராட்ட காலத்தில் யூன் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் அக்காலப்பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும், குறிப்பாக 04.06.2024 அன்று பிரான்சில் சாவடைந்த மூத்த போராளி விநாயகம் மற்றும் 16.06.2024 அன்று தாயகத்தில் சாவடைந்த வைத்திய கலாநிதி மாமனிதர் ஜெயகுலராஜா ஆகியோருக்குமான ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருமண்டபத்தில் நிகழ்வுகள் பேராளர்களின் திருவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகியது. ஆசியுரையினை அருட்சுனைஞர் முருகுதிரி சிறிரஞ்சன் அவர்கள் வழங்க, வரவேற்புரையினை ஆலோசகர் திரு.பாலகிருஸ்ணன் ஆசிரியர் அவர்கள் வழங்கினார். தலைமை உரைகளை உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அமுது இளஞ்செழியனும் வைத்திய கலாநிதியும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பேராளரான பூலோகநாதன் அவர்களும் வழங்கினர்.
தொடர்ந்து நோக்க உரையினை நிகழ்வு ஏற்பாட்டு குழு இணைப்பாளர் திரு. அகிலன் அவர்கள் வழங்கினார். தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை யாழிசை கலையக மாணவிகள் வழங்க, தமிழ் வணக்க நடனங்களை சிவலாய மாணவிகள், சிவதர்மி நர்த்தனாயல மாணவிகளும், சௌத்தென்ட் முத்தமிழ் மாணவிகளும் வழங்கியிருந்தனர்.
இன்னிய அணிவகுப்பினை சவுத்என்ட் முத்தமிழ் மன்ற மாணவர்கள் வழங்க, பறை இசையினையும் சிலம்பத்தினையும் நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையினரும் வீரத்தமிழர் முத்தமிழ் மன்றத்தினரும் வழங்க, காவடியினை தமிழ் சோலை (Dunstable) பாடசாலை மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்.
சத்தியவான் சாவித்திரி நாட்டு கூத்தினை சௌத்தென்ட் முத்தமிழ் மாணவர்கள் வழங்க, கூத்து வழி தமிழ் வணக்கத்தினை மெய்வெளி அரங்க மாணவர்கள் வழங்கினர்.
சிறப்புரைகளை தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழருவி சிவகுமார், தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த மொழி பேரறிஞர் தக்கார் மாசோ விக்டர், நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையின் இணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த, 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் மகள் இராஐதுரை, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் மதிவதனி, பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த உலக தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய தலைவர் மைக்கல் கொலின்ஸ், தமிழ் தேசிய செயற்பாட்டளரும் சைவநெறி அறிஞருமான முருகானந்தம், இளையவன் செல்வன் அன்பு, மலேசியாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் குணபதி ஆறுமுகம் உட்பட பலர் வழங்கியிருந்தனர்.
மெய்வெளி அரங்கத்தினர் வழங்கிய "மரணத்தை விட கொடியது " என்னும் அரங்க ஆற்றுகை மிகவும் உணர்வுபூர்வமாகவும், இன்றைய காலத்தின் யாதார்த்தினை சுட்டி காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு
எதிர்வரும் காலத்தில் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டினினை பிரித்தானியா ஓக்ஸ்போர்ட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் என்பதனை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பாவுக்கான தலைவர் மைக்கல் கொலின்ஸினால் அறிவிக்கப்பட்டது.
மேலும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் வசந்தன் 50வது ஆண்டு "உயிர் கொடை உத்தமர்களின் நினைவு நாள் மலரை வெளியிட்டு வைத்தார்.
அத்துடன் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் கட்டப்பட இருக்கும் "தமிழ் இல்ல" கட்டுமானத்துக்கான இணைய வழி நிதி சேகரிப்புக்கான பொறி முறையும் வெளியிட ப்பட்டு வைக்கப்பட்டது.
தமிழர் தகவல் மன்றத்தின் ( TIC) இலங்கை தீவில் தமிழர்களின் தொன்மையும் வரலாற்றினையும் உள்ளடக்கியதாக தமிழீழ நிழல் அரசாங்கத்தின் மாதிரி கண்காட்சி மிகச் சிறப்பாக இடம்பெற்றது. சம நேரத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட பேராளர்களுக்கான மதிப்பளித்தலும், நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவ மாணவிகளுக்கான மதிப்பளித்தலும் அரங்கத்தில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் சங்கமத்துடன் குறிப்பாக பெருமளவு இளையோர்களின் பங்களிப்புடன் "உயிர் கொடை உத்தமர்கள்" நினைவு நாள் நிகழ்வுகள் பல்வேறு நினைவுகளுடனும் உணர்வுகளுடனும் நடந்தறியது.