இலங்கை தமிழ் அகதிகள் 29 பேர் தற்கொலைக்கு முயற்சி!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது 29 பேர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஆகஸ்ட் 18ம் திகதி திருச்சி மத்திய சிறையில் உள்ள 17 கைதிகள் பல முறைகளைப் பயன்படுத்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளதாக ALJAZEERA செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் மேலும் 12 கைதிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும், எனினும் இந்த இரண்டு சம்பவங்களிலும் யாரும் உயிரிழக்கவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள முள்வேலிக்கு பின்னால் சுமார் 80 இலங்கைத் தமிழர்கள் பல வாரங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1980க்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றனர்.
இந்நிலையில், கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாத அகதிகள் தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு வந்த அகதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களும் இருந்தனர்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர், அவற்றில் இரண்டு மூடப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்காக திருச்சி முகாம் மட்டுமே இருந்தது, அவர்கள் மற்ற தமிழ் அகதிகளுடன் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்த முகாம்கள் தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவான கியூ பிரிவின் மேற்பார்வையில் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்வதாகவும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.