வள்ளல்களும் தமிழரசியலும்
இலவசமாகக் கிடைப்பதைப் பெரும்பாலானவர்கள் கைவிடமாட்டார்கள். இது பெரும்பாலான எல்லாச் சமூகங்களிலும் காணப்படும் ஒரியல்பு. அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில், கூட்டுக் காயங்களிலும் கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தில், உதவிக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும்.
கடந்த 15 ஆண்டு கால ஈழத்தமிழ் அரசியலானது அவ்வாறு உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பொருத்தமான நிவாரணத் திட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கத் தவறிவிட்டது.
2009இல் காணாமல்போன தனது இளம் கணவனுக்காக போராடிய இளம் மனைவி இப்பொழுது முதுமையின் வாசலை அடைந்து விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்படித்தான் காயப்பட்டவர்கள், அவயங்களை இழந்தவர்கள்,மிகக்குறிப்பாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்துக்குக் கீழ் இயங்க முடியாதவர்கள், இரு கண்களையும் இழந்தவர்கள், இரு கால்களையும் இழந்தவர்கள் போன்றவர்களுக்கு உதவுவதற்கு ஒரு மையத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட எத்தனை கட்டமைப்புகள் உண்டு?
நோக்கு நிலை
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாக உள்ள பெண்களின் கண்ணீரை வைத்து அரசியல் செய்யும் ஒரு சமூகம், அப்பெண்கள் மத்தியில் காணப்படுகின்ற இளவயதினருக்குப் புதிய வாழ்வைக் கொடுக்கத் தவறிவிட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள ஒரு சமூகத்தில் பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய உதவிக்காக காத்திருப்பவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும்.தமிழ்ச்சமூகத்தில் பிறர் உதவியில் தங்கியிருக்கும் தொகையினரை கடந்த 15ஆண்டுகளாக அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள தனி நபர்கள், தன்னார்வ அமைப்புக்கள்,இவைதவிர நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வள்ளல்கள், கொடையாளிகள் போன்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அரவணைத்து வருகிறார்கள்.
மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பும் அவரவர் நோக்கு நிலையில் இருந்துதான் அந்த மக்கள் கூட்டத்தை அரவணைக்கிறார்கள்.அதனால் தேவை நாடிகளாக இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு விகிதமளவு நிவாரணம் கிடைக்கிறது. உதவிகள் கிடைக்கின்றன.
உளவளத் துணையும் கிடைக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் தானம் செய்பவர்கள் முதலாவதாக,நல்லதைத்தான் செய்கிறார்கள். ஆனால் தொண்டும் தானமும் மட்டும் ஒரு சமூகத்தை அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்க உதவாது.
அந்த மக்களைக் கையேந்தி மக்களாக வைத்திருப்பதற்கும் அப்பால் அவர்களை வாழ்வில் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக, விடாமுயற்சி உள்ள உழைப்பாளர்களாக மாற்ற வேண்டும்.
அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு. ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாடு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் தானமும் தொண்டும் கருணையின் பாற்பட்ட செயல்கள் மட்டுமல்ல. அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஒரு பகுதி.
கொழும்புக்கான ஐ.நாவின் இணைப்பாளர்
அவை தேசியக் கடமைகள்.காயத்தில்,துக்கத்தில்,இழப்பில்,தனிமையில் விழுந்து கிடப்பவர்களுக்குக் கைகொடுப்பது, அவர்களைத் தூக்கி நிறுத்துவது, அவர்களின் காயங்களை ஆற்றுவது, போன்றன ஒப்பீட்டளவில் “செட்டில்ட் “ஆன தமிழ் மக்களின் தேசியக் கடமைகள்.
அதற்கு ஓர் அரசியல் தலைமைத்துவம்தான் முழுமையான பொருளில் வழி நடத்த முடியும்.ஓரளவுக்குச் சமூகத் தலைமைத்துவமும் மதத் தலைமைத்துவமும் செயற்பாட்டு அமைப்புக்களும் செய்யலாம்.
ஆனால் அப்படிப்பட்ட செய்முறைகள் கடந்த 15 ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவில்தான் நடநதிருக்கின்றன. மிகக் குறைந்த தொகையினர்தான் அவ்வாறு வலுவூட்டப்பட்டிருக்கிறார்கள்.
பெருந்தொகையானவர்கள் தொடர்ந்தும் கையேந்திகளாகவும் நிவாரணங்களுக்காகக் காத்திருப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியை வள்ளல்களும் கொடையாளிகளும் தமக்கு வசதியாகக் கையாளப் பார்க்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று கொழும்புக்கான ஐநாவின் இணைப்பாளர், ஐநா அலுவலகம் ஒன்றில் குடிமக்கள் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பதாக இருந்தார்.
ஆனால் அவருடைய பயணம் சிறிது நேரம் தாமதம் ஆகியது. ஏனென்றால் அவர் வரும் வழியில் நாவலர் வீதியில் ஒரு பல்பொருள் அங்காடியைச் சூழ உள்ள பிரதேசத்தில் அசாதாரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தான நிகழ்வு
அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடி உரிமையாளரின் பெருமெடுப்பிலான தான நிகழ்வே அந்த நெரிசலுக்குக் காரணம். அங்கே பொலிஸாரும் படை வீரர்களும் காணப்பட்டார்கள். எனினும் அங்கு பெருகிய மக்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை.
அதனால் ஐநாவின் பிரதிநிதி சிறிது கால தாமதமாக சந்திப்புக்கு வந்தார். மேற்சொன்ன பல்பொருள் அங்காடியின் முதலாளி ஏற்கனவே அதுபோன்ற தான நடவடிக்கைகளுக்காக மிகவும் பிரபல்யமானவர்.
உதவி தேவைப்படுகிறவர்களுக்கு அவர் காசை அள்ளிவீசுவார். அன்றைய தான நிகழ்வுக்கு வெளியிடங்களில் இருந்து குறிப்பாக தூர இடங்களில் இருந்து மக்கள் முதல்நாளே இரவு பயணம்செய்து அங்கு வந்திருந்தார்கள்.
வயோதிபர்கள்,நோயாளிகள்,குழந்தைகள்,மாற்றுத் திறனாளிகள் என்று பல வகைப்பட்டவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களைக் கௌரவமான விதத்தில் ஒழுங்குபடுத்தி அதை ஒரு கௌரவமான தான நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்திருந்தால், அன்றைக்கு அந்த நெரிசலைத் தவிர்த்து இருந்திருக்கலாம்.
அல்லது அது ஒரு கட்டுப்படுத்த முடியாத பெரும் விழாவாக வெளியில் தெரிவதை அந்த முதலாளி விரும்பினாரோ தெரியவில்லை. கொடையாளிகள் அல்லது வள்ளல்கள் எல்லாச் சமூகங்களிலுமே போற்றப்படுகின்றார்கள்.
எல்லா மதங்களிலுமே அவர்களுக்கு உயர்வான இடம் உண்டு. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புராண நாயகனாகிய கர்ணன், முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்த மன்னன் பாரி போன்றவர்கள் உதாரணங்களாகக் கூறப்படுவதுண்டு.
நவீன வரலாற்றிலும் கோடீஸ்வரர்களும் உலகப் பெரு முதலாளிகளும் தாம் திரட்டிய செல்வத்தின் ஒரு பகுதியைத் தானம் செய்கிறார்கள். அல்லது தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழராகிய ராஜ் ராஜரத்தினம் அவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தானம் செய்வதற்கு உழைக்க வேண்டும்.
உழைத்தால்தான், செல்வத்தைத் திரட்டினால்தான், தானமாகக் கொடுக்கலாம் என்ற பொருள்பட அவர் தன்னுடைய “சமனற்ற நீதி” என்ற நூலில் எழுதியிருக்கிறார்.
தொண்டு செய்வது நல்லது.வள்ளல்கள் போற்றுதற்குரியவர்கள்.ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியலில் இறங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு எங்கிருந்து வருகிறது?
அரசியலில் ஈடுபடும் வள்ளல்கள்
தமிழகத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் வள்ளல்களாக போற்றப்படுகிறார்கள். அதனால் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை அவர்கள் சம்பாதித்தார்கள்.
ஈழத்தமிழர்கள் மத்தியில் அவ்வாறு வள்ளல்கள் அரசியலில் ஈடுபடும் ஒரு போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது.
வள்ளல்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று இக்கட்டுரை கூறவரவில்லை. கடந்த 15 ஆண்டுகால தமிழ் அரசியல் போக்கெனப்படுவது வள்ளல்களுக்கும் கொடையாளிகளுக்கும் வசதியான ஒன்றுதான்.
கொடைகளின்மூலம் வள்ளல்கள் சமூகத்தில் இயல்பாகவே அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்று விடுகிறார்கள். அதை அவர்கள் அரசியலில் முதலீடு செய்வது இலகுவானது. ஏற்கனவே தமது தொழில்சார் திறமைகள் காரணமாக புகழடைந்த,செல்வந்தர்களாகிய சிலர் தமிழரசியலில் இறங்கிவிட்டார்கள்.
செல்வந்தர்களாகவும் பிரபல்யங்களாகவும் இருக்கும் பலர் இறங்கத் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் வள்ளல்கள் இலகுவாக அரசியலில் நுழையலாம். இது அரசியல்வாதியாக இருப்பதற்குரிய தகமை என்ன என்ற தமிழ்ச் சமூகத்தின் அளவுகோல்களைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
அதுமட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலை முன்னெடுக்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் ஒரு தேசியக் கடமையை தனிப்பட்ட தானமாகவும் கருணையாகவும் கருதி அதன் ஊடாக அரசியலில் பிரவேசிக்க முயற்சிக்கிறார்களா?
கூட்டு மனவடுகளோடும் ஆறாத கூட்டுக்காயங்களோடும், அவநம்பிக்கைகளோடும் காணப்படும் ஒரு சமூகத்தை பண்புருமாற்றத்தின் ஊடாகக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு 2009க்குப் பின் வந்த எல்லாத் தலைவர்களுக்கும் இருந்தது.
ஆனால் அது பொருத்தமான விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாக விழுந்த வெற்றிடத்தில்தான் வள்ளல்கள் தலைவர்களாக வர முயற்சிக்கிறார்கள்.
தமிழ்ச் சமூகத்துக்கு இப்பொழுது தேவையாக இருப்பது 15ஆண்டுகளின் பின்னரும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு கூட்டு அரசியல் செயல்பாடுதான். ஆனால் அவ்வாறு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை முன்னெடுக்கவல்ல ஆளுமை மிகுந்த தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு?
மக்களுக்கு நிவாரணம் வேண்டும்.உதவிகள் வேண்டும். நிதிவளம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் காசை என்ன செய்வது என்று தெரியாமல் கோவில்களில் கொண்டு போய்க் கொட்டுகின்றது. அந்தக் காசைப் பயன் பெறுமதி மிக்கதாக மாற்றலாம்.
அதற்கு 2009க்குப் பின்னரான தமிழ் அரசியலைக் குறித்த பொருத்தமான அரசியல் தரிசனமும் பொருளாதார தரிசனமும் நிவாரண தரிசனமும் இருக்க வேண்டும்.
நிவாரண தரிசனம்
வள்ளல்களுக்கு அவ்வாறான தரிசனம் இருக்குமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வள்ளல்கள் தங்களை புதிய எம்ஜிஆர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தான நிகழ்வை நாடகத்தனமாக ஒழுங்குபடுத்தி,பாட்டுக்கு எம்ஜிஆர் போல ஆடி,யுடியுப்பர்களுக்குச் செய்தியாக மாறும் போதுதான்,அது விவகாரமாகிறது.
தொண்டு நல்லது. தானம் நல்லது. ஆனால் தொண்டர்களும் வள்ளல்களும் அரசியல்வாதிகளாக வர விரும்பினால் அதற்குரிய ஒழுக்கமும் தரிசனமும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்.
தானம் ஒரு அர்ப்பணிப்புத்தான். ஆனால் அது மட்டும் போதாது. பொருத்தமான அரசியல் தரிசனம் இருக்க வேண்டும். அது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
அதை ஒரு தேசியக் கடமையாக செய்ய வேண்டும். அற்புதமான ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.ஒரு கை கொடுப்பது மறுகைக்குத் தெரியக்கூடாது என்று. தானம் செய்வதால் தனக்குக் கிடைக்கும் புகழையும் பிரபல்யத்தையுங்கூடத் தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் தறுவாயில் அவனுடைய தர்மமே அவனுக்குப் பாரமாக இருந்தது. அதனால் கர்ணன் தானம் செய்து தான் சம்பாதித்த புண்ணியத்தையும் தானம் செய்தான்.அது புராண கால கர்ணன்.அவனுக்குத் தலைகாத்த தர்மம் ஒரு பாரம். நவீன அரசியலில் தர்மம் ஒரு முதலீடா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 19 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.