ராஜபக்சர்களை வெல்ல முடியாது என்ற விம்பம் உருவாகி இருந்தது: சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்
தெற்கில் உள்ளவர்கள் புரட்சிகரமான மாற்றத்தை விரும்பும் போது தமிழ் மக்கள் அதில் பின்தங்கி இருக்கக்கூடாது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாகக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடு தற்போது கொந்தளிப்பு நிலையிலே காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக ராஜபக்ச என்ற பெயர் தெற்கு அரசியலில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அரசியல் களத்தில் மிக தைரியத்துடன் பிரகாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை வெல்ல முடியாது என்ற விம்பம் உருவாகி இருந்தது.
இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். கல்வியாளர்களாக இருந்தாலும் சரி தொழில்சார் விற்பனர்களாக இருந்தாலும் சரி ராஜபக்சவினுடைய அதிகார மேம்பாட்டிற்கு அடி பணிந்து நன்மைகளைப் பெறுவதிலே குறியாக இருந்தார்கள். பௌத்த சிங்கள மேலின வாதத்தை ஏற்றுக்கொண்டு இருப்பவர்களே காணப்பட்டனர்.
ஆனால் அந்த விம்பம் இப்போது சரிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் மக்கள் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அடிவயிற்றில் கைவைத்தபடியால் ராஜபக்சர்களது விம்பம் சரிந்து விட்டது. தெற்கிலுள்ள சிங்கள எல்லா பகுதி மக்களிடமும் ராஜபக்சவினருக்கு எதிரான விடயம் மேலோங்கி நிற்கின்றது.
எனவே இது தான் சரியான தருணம் அவர்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி முகத்திரையைக் கிழித்து அவர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதனைவிடப் போர்க்குற்றவாளிகள் என்ற விடயமும் வெளியே வரத்தொடங்கி இருக்கின்றது.
பல்வேறு இடங்களில் இடம்பெறும் போராட்டங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பதாதைகள் தற்போது சிங்கள மக்கள் ஏந்தி செல்லக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
தமிழ் மக்களாகிய நாங்கள் பல வருடங்களாகப் போர்க்குற்றத்திற்கு இவர்கள் உள்ளாக்கப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் வேண்டும், சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்று பல வருடங்களாகக் கூறிக்கொண்டு இருந்தும் எதுவித பலனும் இல்லாதிருந்த நேரத்தில் இப்போது விடிவெள்ளி போல இந்த நிலைமை தொடங்கியிருக்கின்றது.
புது முறைமை ஒன்று வரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்சக்கள் போய் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க வந்தாலும் அதே விளைவுகள் தான் தலைதூக்கும். இந்த சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெற்கில் எல்லா விதமான பிரிவினரும் எதிர்ப்பிற்குத் துணை நிற்கின்றார்கள். வடக்கு கிழக்கில் குறிப்பாகத் தமிழ் மக்கள் தமிழர் செறிந்து வாழும் இடங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தெற்கில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், தொழில்சார் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு பேரணியை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் தமிழ் மண்ணில் தமிழ் மக்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் இதில் மும்முரமாக ஈடுபடாமல் இருப்பது எங்களுக்குக் கவலை தருகின்றது. எனவே இவ்விடயம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு இந்த போராட்டத்திலும் நாங்கள் பங்கு கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுக்கு நன்மை பயக்கும் விடயமாக இருக்கின்றது.
தெற்கில் உள்ள அரசியல் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என இருந்து விட கூடாது. ஏனென்றால் எங்களுக்கு பொது எதிரி ஒருவன் இருக்கிறான். அதனை முதலில் ஒழித்து விட்டால் எங்களுக்கு ஓரளவாவது நிம்மதி கிடைக்கும்.
எனவே இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சர்வதேச விசாரணை, பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிமன்றிற்குக் கொண்டு செல்லல் என்பதனை மீண்டும் நாங்கள் கொண்டு செல்லலாம். இச் சந்தர்ப்பத்தினை நழுவ விடக்கூடாது. தமிழ் மக்களும் இப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். தங்கள் பிரதேசங்களிலும் மும்முரமாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று.
ஏற்கனவே நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர், சரணடைந்தோர், சிறையிலுள்ள அரசியல் கைதிகள் இவர்கள் சார்பாக மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றோம். அதற்கு மத்தியில் இதனையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் தெற்கிலுள்ளவர்கள் புரட்சிகரமான மாற்றத்தை விரும்பும் போது நாங்கள் அதில் பின்தங்கி இருக்கக்கூடாது.
எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் அதனைவிட ராஜபக்சர்களது அதிகாரம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டுவிட்டால் வேறு பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்.
அதன் அடிப்படையில்
தெற்கிலே எடுக்கப்படும் போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும்,
எதிர்ப்புக்களுக்கும் தமிழ் மக்கள் மிக மும்முரமாகப் பங்களிப்பு செய்ய வேண்டும்
என்பது என்னுடைய கருத்து என குறிப்பிட்டுள்ளார்.



