சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரின் சாதனை
சீனாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD இன் துணை நிறுவனமான யாங்வாங் (Yangwang) ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் யாங்வாங் U9 "எக்ஸ்ட்ரீம் என்ற சூப்பர்கார், மணிக்கு 496.22 கி.மீ. (308 மைல்) வேகத்தை எட்டி, உற்பத்தி நிலை கார்களுக்கான (Production Car) அதிவேக சாதனையை முறியடித்துள்ளது.
இந்தச் சோதனை ஓட்டம் இந்த மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் உள்ள ஒரு சோதனைத் தளத்தில் வைத்து நடைபெற்றது.
சாதனை
இதற்கு முன்னர், புகாட்டி ஷிரோன் சூப்பர் ஸ்போர்ட் (Bugatti Chiron Super Sport) கார் 2019-ஆம் ஆண்டு மணிக்கு 490.5 கி.மீ. (304.7 மைல்) வேகத்தை எட்டியதே சாதனையாக இருந்தது.
தற்போது, யாங்வாங் U9 எக்ஸ்ட்ரீம் அந்தக் காரின் சாதனையை முறியடித்துள்ளதன் மூலம், உலகிலேயே அதிவேகமான கார் என்ற பட்டத்தை வென்ற முதல் மின்சார கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பொதுவான யாங்வாங் U9 ஹைப்பர்கார், சீனாவில் சுமார் $233,000 அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அதிவேக 'எக்ஸ்ட்ரீம்' ரகமானது, மேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் எஞ்சின் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் 30 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என BYD அறிவித்துள்ளது.



