விகாரைகளுக்குள் படுகொலை செய்து புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்: ரவிகரன் எம்.பி சந்தேகம்
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
செம்மணியில் நேற்று (17.08) நடைபெற்ற நீதியின் ஓலம் - 02' இறுதி நாள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள், முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் ஆர்ப்பட்டப் பேரணியினை முன்னெடுத்திருக்கின்றனர்.
ஈழத் தமிழர்கள்
ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
இது தொடர்பில் ஏற்கனவே நான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன். அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது எனக் குறிப்பிட்டார்.