அரசாங்கத்தின் செயற்பாடே, தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்க் கட்சிகளை அந்நியப்படுத்தப்படும்..!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பேரார்வம் மிகுந்த திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் ' கிளீன் ஸ்ரீலங்கா ' (Clean Sri Lanka ) செயற்திட்டம் குறித்து நேர்மறையானதும் எதிர்மறையானதுமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆசியப் பிராந்தியத்திலேயே மிகவும் தூய்மையான நாடாக இலங்கையை மாற்றும் நோக்குடன் தனது அரசாங்கம் இந்த விசேட செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்று நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறினார்.
ஆனால், கிளீன் ஸ்ரீலங்காவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் ஆரம்பக்கட்ட அணுகுமுறைகளின் விளைவாக கிளம்பிய விமர்சனங்களை அடுத்து அரசாங்க தலைவர்கள் இந்த செயற்திட்டம் வெறுமனே சுற்றுச்சூழலை துப்புரவாக்குவதுடனோ அல்லது பேருந்துகளிலும் முச்சக்கர வண்டிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் மேலதிக உபகரணங்களை அகற்றுவதுடனோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்றும் பொதுவில் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் கையாளுவதற்கான பரந்த இலட்சியத்தை கொண்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
ஜனவரி முதலாம் திகதி கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க புதிய வருடம் இலங்கையில் புதியதொரு அரசியல் கலாசாரத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்று பிரகடனம் செய்தார்.
தனிப்பட்ட நலன்
" குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பொதுநலன்களுக்கு மேலாக தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் உயர்குழாம் ஒன்றின் உருவாக்கம் போன்ற நடைமுறைகளை ஒழித்துக்கட்டும் இலட்சியத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
மக்களின் அபிலாசைகளுக்கு இசைவான அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிப்பதில் நாம் பற்றுறுதி கொண்டிருக்கிறோம். அதனால், எமது சமுதாயத்தை குணப்படுத்தி புதிய பண்புகளுடனும் கோட்பாடுகளுடனும் கூடிய ஒரு புதிய முறைமையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது" என்றும் அவர் கூறினார்.
கிளீன் ஸ்ரீலங்கா தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த செயற்திட்டத்தின் ஊடாக இலங்கை சமுதாயத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் இலங்கையை அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு சமூக, தார்மீக மற்றும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளை வகுத்துச் செயற்படுவதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும் கூறினார்.
நல்லாட்சிக் கோட்பாட்டின் மூலமாக சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஊடாட்டத்துக்கும் மனித உறவுகளுக்குமான பண்புகளையும் நெறிமுறைகளையும் வகுத்து 'சிரிக்கும் மக்களைக்' கொண்ட ஒரு அழகான தேசமாக இலங்கையை மாற்றுவதே தங்களது இறுதிக் குறிக்கோள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கிளீன் ஸ்ரீலங்கா செயற் திட்டம் தொடர்பாக அரசாங்க தலைவர்கள் அளித்திருக்கும் விளக்கங்களின் அடிப்படையில் நோக்கும்போது உறுதியான தார்மீகப் பண்புகளைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதே அவர்களது இலட்சியம் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சுற்றுச்சூழல் தூய்மையை மாத்திரமல்ல, கலாசாரத் தூய்மையின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துவதில் அக்கறை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சிறந்த சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களின் நடத்தைகளில் பண்புரீதியான மாற்றத்தை ஊக்குவிப்பதில் ( எவ்வாறு சிந்திப்பது, எவ்வாறு உணர்வது, எவ்வாறு செயற்படுவது) அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற முன்னென்றுமில்லாத வகையிலான ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பழைய பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளை நிராகரித்த மக்கள் தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு கொண்டுவந்தார்கள்.
அவர்கள் ஜனாதிபதி திசாநாயக்கவிடமும் அவரது தலைமையிலான அரசாங்கத்திடமும் முற்றிலும் வேறுபட்ட தலைமைத்துவப் பாங்கையும் ஆட்சி முறையையும் எதிர்பார்க்கிறார்கள். முன்னைய ஒழுங்கு முறையில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினாலும் கூட, புதிய முறைமையோ அல்லது புதிய அரசியல் கலாசாரமோ எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு சாதாரண மக்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
நாட்டின் அரசியல் தலைமை
அது விடயத்தில் நாட்டின் அரசியல் தலைமைத்துவமே அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். இதுகாலவரையில் ஆட்சிசெய்த அரசியல் தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியது மாத்திரமல்ல, மக்கள் மத்தியில் இருந்த தவறான சிந்தனைகளை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை வலுப்படுத்தினார்கள்.
மக்களுக்கு சரியான பாதையைக் காட்டவேண்டிய தலைவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்ற போர்வையில் தவறான சிந்தனைகளை மக்கள் மத்தியில் வலுப்படுத்தக்கூடிய அரசியல் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்கள்.
நாடு இன்று எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும். அதனால், முன்னைய அரசியல் தலைவர்கள் பிரச்சினைகளை கையாளுவதற்கு கடைப்பிடித்த அணுகுமுறைகளில் இருந்து எந்தளவுக்கு வேறுபட்ட அணுகுமுறையை ஜனாதிபதி திசாநாயக்கவினால் கடைப்பிடிக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே புதிய கலாசாரம் மற்றும் புதிய விழுமியங்களைக் கொண்ட சமுதாயத்தை தோற்றுவிப்பது பற்றிய அவரது பிரகடனங்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
கடந்த கால அரசியல் காரணமாக இலங்கை இனரீதியாக பிளவுபட்ட ஒரு சமுதாயமாகவே இருக்கிறது. அந்த சமுதாயத்தில் பண்பு ரீதியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் இனங்களுக்கு இடையிலான உறவுகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
இலங்கையில் இனிமேல் இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் திடசங்கற்பம் பூண்டிருக்கின்ற போதிலும், இதுகால வரையான இனவாத அரசியல் காரணமாக சமூகங்களுக்கு இடையில் வேரூன்றியிருக்கும் அவநம்பிக்கையையும் ஐயுறவுகளையும் ஓரளவுக்கேனும் தணிக்கக்கூடிய தெளிவான அறிகுறிகளை அவர்களின் நடவடிக்கைகளில் காணமுடியவில்லை.
கிளீன் ஸ்ரீலங்காவுக்கு பொறுப்பான ஜனாதிபதி செயலணிக்கு உறுப்பினர்களை நியமித்த விடயத்தில் கூட புதிய காலாசார நாட்டம் வெளிக்காட்டப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அரசாங்கம் கூறுகின்றதைப் போன்று இலங்கைச் சமூகத்தின் சிந்தனையில் தார்மீக அடிப்படையிலான பண்பு மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமானால் இனத்துவ சமூகங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை மதிக்கின்ற ஒரு மனமாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் தேசிய இனப்பிரச்சினை தோன்றியதற்கான அடிப்படைக் காரணிகள் பற்றிய தெளிவான புரிதலும் ஏற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத் தலைவர்கள் அது விடயத்தில் போதிய அக்கறைகாட்டும் மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தென்னிலங்கை சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு தேசிய அரசியல் கட்சி பாரம்பரியமாக சிறுபான்மைச் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளை விடவும் கூடுதலான நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி சாதித்திருக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியின் மூலமான செய்தியை ஜனாதிபதியும் அரசாங்கமும் உகந்த முறையில் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
ஐக்கிய அரசியலின் புதிய கட்டம்
தேர்தல் முடிவுகள் தொடர்பான நியாயபூர்வமான அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து இலங்கையின் முக்கியமான ஒரு அரசறிவியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால், " வடக்கு, கிழக்கில் தாங்கள் அடைந்த தேர்தல் வெற்றியை இனவாத அடிப்படையிலான அரசியல் நிகழ்ச்சி நிரலின் நிராகரிப்பாகவும் இலங்கையில் தேசிய ஐக்கிய அரசியலின் புதிய கட்டத்தின் ஒரு தொடக்கமாகவும் தேசிய மக்கள் சக்தி நோக்குகிறது.
தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த அமோக ஆதரவை அதிகாரப் பரவலாக்கத்தை வேண்டிநிற்கும் அரசியலின் தகுதி மற்றும் தமிழ்த் தேசியவாத அபிலாசைகளின் நிராகரிப்பு என்று மிகைமதிப்பீடு செய்யக்கூடாது. சுதந்திரத்துக்கு பின்னரான தசாப்தங்களில் அரசியல் சமத்துவத்துக்கான சிறுபான்மையினச் சமூகங்களின் கோரிக்கைளை பெறுமதியற்றதாக்குவதற்கான ஆயுதமாக வடக்கு, கிழக்கின் தேர்தல் முடிவுகளை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தக்கூடாது.
" தேசிய மக்கள் சக்திக்கு நாடுபூராவும் கிடைத்த அமோக ஆதரவை ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டுக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் நிலவும் ஆழக்காலூன்றிய தவறான நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதற்கு பயன்படுத்தினால் மாத்திரமே புதிய கலாசாரம் பற்றிய பேச்சுக்களுக்கு உண்மையில் அர்த்தம் இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உள்ளூராட்சி, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரப் பரவலாக்கத்தையும் உத்தரவாதம் செய்யும் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய ஜனாதிபதி இலங்கையின் அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இருக்கின்ற ஒரேயொரு சட்ட ஏற்பாடான 13 ஆவது திருத்தம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து மூண்ட சர்ச்சைக்கு மத்தியில் கருத்து தெரிவித்த திசாநாயக்க தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு 13 வது திருத்தம் தீர்வாக அமையும் என்று நம்பினால் அந்த திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இல்லை என்று கூறினார். அரசியலமைப்பில் நீண்டகாலமாக இருக்கும் அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் இன்றைய பிரதமரும் அன்று கூறினார்.
ஆனால், விக்ரமசிங்கவின் முயற்சிக்கு தென்னிலங்கை தேசியவாத சக்திகள் மத்தியில் எதிர்ப்பு வலுவடைந்தயைடுத்து இருவரும் அதைப் பற்றி பேசுவதை கைவிட்டு விட்டனர். ஜனாதிபதியாக வந்த பிறகு பொதுவில் அவர் தேசிய இனப்பிரச்சினை குறித்தோ அல்லது 13 வது திருத்தம் குறித்தோ பேசுவதை திசாநாயக்க தவிர்த்துவருகிறார்.
மூன்று வருடங்களுக்கு பிறகு முன்னெடுக்கப்படவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளின் போது 13 வது திருத்தத்துக்கு என்ன கதி நேருமோ எவரும் அறியார். ஆனால், இனப்பிரச்சினையை அலட்சியப்படுத்தினால், எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத் திட்டத்துக்கும் நியாயபூர்வத்தன்மையோ அல்லது பொருத்தப்பாடோ இருக்கப்போவதில்லை.
ஆனால், தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக தங்களது முன்னைய கொள்கைகளிலும் அணுகுமுறையிலும் பெரும் மாற்றங்களைச் செய்திருப்பதாக பெருமையாகக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் தங்களது கடும் போக்கான நிலைப்பாடுகளை தளர்த்துவதில் மாத்திரம் ஏன் விதிவிலக்காக நடந்துகொள்கிறார்கள்?
தேசிய மக்கள் சக்தி
இந்த விடயத்தில் கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தான் விளக்கவேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தையும் தார்மீகப் பண்புகள் மற்றும் நெறிமுறைளைக் கொண்ட ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவதற்கு உறுதி பூண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான தனது கட்சியின் பிடிவாதத்தை மாற்றுவதற்கு முன்வராமல் மக்களின் சிந்தனையில் எவ்வாறு பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்?
அவர் கூறும் பண்பு மாற்றத்தின் மட்டுப்பாடுகள் எவை? 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) எதிர்த்து ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் கூட, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்த பிறகு தேர்தல்களில் போட்டியிட்டு மாகாணசபைகளில் அங்கம் வகித்தது. இந்தியாவினால் திணிக்கப்பட்டதாகக் காரணம் கூறி 13 வது திருத்தத்தை ஜே.வி.பி. எதிர்த்திருந்தாலும், தற்போது இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுப்பைச் செய்வதற்கு தயக்கம் காட்டுவது ஏன்?
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவராக இன்று விளங்கும் ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கத்துக்கும் எதிராக நிலவும் ஆழமான எதிர்ப்புணர்வையும் தப்பபிப்பிராயங்களையும் தணிக்குமுகமாக அவர்களின் மனங்களை வென்றெடுக்கக்கூடிய ஒரு தகுநிலையில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
முன்னைய ஜனாதிபதிகளைப் போலன்றி வரலாறு தந்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவர் அந்த பணியைச் செய்ய முன்வராவிட்டால் வேறு எவரும் அண்மைய எதிர்காலத்தில் அதைச் செய்வதற்கு வாய்ப்பில்லை.
புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன்னரான மூன்று வருட காலப்பகுதியில் மாகாணசபைகளை ஒழிக்கப்போவதில்லை என்று வெறுமனே கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13 வது திருத்தத்தின் அதிகாரங்களைச் சாத்தியமானளவுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அரசியல் துணிச்சலை வரவழைத்துக் கொண்டால், இலங்கைச் சமூகத்தில் அவரும் அரசாங்கமும் ஏற்படுத்த நாட்டம் கொண்டிருக்கும் பண்புரீதியான மாற்றத்தை நோக்கிய செயன்முறைகளுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதாக நிச்சயம் அமையும்.
இனவாத அரசியல் மீண்டும் தலையெடுக்காமல் தடுக்கவும் அது பெருமளவுக்கு உதவும். தமிழ்க்கட்சிகள் அந்த திருத்தத்தை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி ஜனாதிபதி கவலைப்படத் தேவையில்லை.
தமிழ்க்கட்சிகள்
அரசாங்கம் நடந்து கொள்கின்ற முறையில்தான் தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களிடமிருந்து மேலும் அந்நியப்படுமா அல்லது இல்லையா என்பது தங்கியிருக்கிறது. உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் தமிழ் மக்களை நிலைவரம் வேண்டிநிற்பதற்கு இணங்க நடைமுறைச் சாத்தியமான வழியில் வழிநடத்தத்தவறிய தமிழ்க் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஆரோக்கியமான சமிக்ஞையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்காமல் இருப்பதை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் மத்தியில் அவற்றின் செல்வாக்கை மீட்டெடுப்பதில் நாட்டம் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தென்னிலங்கையின் உணர்வுகளில் எந்த விதமான தளர்வும் இல்லாமல் பண்புநிலை மாற்றம் மற்றும் தார்மீக விழுமியங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல இனங்களையும் சமமாக மதிக்கிறது என்றும் இனவாத அரசியலை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை.
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீன்' செய்வதாக இருந்தால் இனப்பிரச்சினையில் பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுவதற்கு ஜனாதிபதி தீவிரமாக பாடுபட வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா முழுமையானதாக அமைவதற்கு இது இன்றியமையாதது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையின் முன்னணி செய்தியாளர், அரசியல் கள ஆய்வாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய அரசியல் ஆய்வின் தமிழாக்கம்