பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழில்ல அடிக்கல் நாட்டு விழா
பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழில்ல கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாவீர நினைவாலய நுழைவாயில் மற்றும் வணக்க தளங்களிலிருந்து காவி வரப்பட்ட அடிக்கற்களும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண்ணும் கட்டிடத்திற்கான அத்திவார பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பொதுச்சுடர், ஈகைச்சுடர், தேசியக்கொடி ஏற்றல் போன்ற அம்சங்களுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தேச விடுதலையை நேசிக்கும் மக்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது,முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித மண்ணினை மாவீரர்களின் துணைவியர் இருவர் அத்திவார பகுதியில் தூவினர்.
இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரது கைகளிலும் அடிக்கல் வழங்கப்பட்ட நிலையில், கற்களில் தமது மனம் நிறைந்த மாவீரர்களின் பெயர்களையும், வாழ்த்துச் செய்திகளையும் எழுதி அத்திவார பகுதியில் நடுகை செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவின் அரசியல் பிரமுகர்களுக்கும், மக்களுக்குமான கருத்துக்கள் உரைகளாக வழங்கப்பட்டுள்ளது.