இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (3) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான கைதுகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் நுழையாதீர்கள் என எத்தனையோ தடவைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும்,தொடர் கைதுகள் இடம்பெற்று வருகின்றது.
தமிழக மீனவர்கள் தமிழகத்தில் தொழில் செய்வதை விட இலங்கை கடற்பரப்பில் தான் தொழில் செய்கின்றார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. தொடர் கைதினால் தமிழக மீனவர்கள் படுகின்ற துன்பங்களையும்,வேதனைகளையும் நாங்கள் பார்த்து வந்தாலும்,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏன் நிறுத்துகிறார்கள் இல்லை என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்துவதை விட தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதே அதிகமாக காணப்படுகிறது.நாங்கள் கடற்படைக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்தாலும்,இவ்வாறான கைதுகளும்,அவர்களின் வருகையை தவிர்ப்பதற்கும் கடற்படையினர் கவனக்குறைவுடன் செயல் படுகின்றார்களா? என எண்ணத்தோன்றுகின்றது.

கடற்பரப்பு ஊடாக ஆட்கடத்தல்
கடற்பரப்பு ஊடாக ஆட்கடத்தல்கள் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்கள் இடம் பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடல் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளதாக அரசு கூறிக்கொண்டாலும்,தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைகளை பார்க்கின்ற போது போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றமை குறித்த கைதுகள் மூலம் தெரியவருகிறது.
இந்திய மீனவர்கள் பல படகுகளுடன் கைது செய்யப்படும் சூழ்நிலையில், கடத்தல் காரர்கள் குறித்த கடல் பகுதியை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
கடற்படையின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்பதே உண்மை. எனவே இலங்கை கடல் எல்லை கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
இலங்கை எல்லை பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இந்திய மீன்பிடி படகு ஒன்று கூட இலங்கை கடல் எல்லையை தாண்டி வராத வகையில் கண்காணிப்பு பலப்படுத்த வேண்டும். தொடர் கைதுகள் இடம் பெற வேண்டும்.
இதன் ஊடாக அவர்களின் அத்து மீறிய வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லையை தாண்டி உள்ளே நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட வேண்டும்.
எனவே இந்திய மீனவர்கள் தயவுசெய்து இலங்கை கடல் எல்லைக்குள் உள் நுழையாதீர்கள். அவ்வாறு உள் நுழைந்தால் கடற்படையினரால் கைது செய்யப்படுவீர்கள். அதை யாராலும் தடுக்க இயலாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri