தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும்...
தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனும்பிய ஊடக அறிக்கையிலெயே இவ்வாறு தெரவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
முஸ்லிம் - தமிழ் நல்லிணக்கம் பற்றிய உரையாடல் மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. கட்சிகளுக்கப்பால் சிவில் தரப்பிலிருந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
கடந்த 1ம் திகதி இது தொடர்பான முயற்சி ஒன்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.
முஸ்லிம்கள் பட்ட துயரங்கள்
வடக்கு - கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஐந்நூறு பேர் வரை கலந்து கொண்டனர். முஸ்லிம் தரப்பிலிருந்து முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் உட்பட சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பட்ட துயரங்கள் பற்றி இப் பெண் பிரதிநிதிகள் உரையாற்றினர். தமிழ்த் தரப்பிலிருந்து இக்கட்டுரையாளரும் சமூக செயற்பாட்டாளர் செல்வின் இரேனியசும் உரையாற்றினர். இருதரப்பும் தங்கள் தங்கள் மனக் காயங்களை நாகரிகமாக வெளிப்படுத்தினர்.

கூட்டம் மிகச் சுமூகமாகவும் அன்னியோன்னியமாகவும் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னரும் கூட அன்னியோன்னியமான வகையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
அண்மைக்காலத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம்; மக்களும் மனம் விட்டுக் கலந்துரையாடக் கூடிய களமாக இது இருந்தது எனலாம். இருதரப்புமே தங்கள் மனக் காயங்களை தெளிவாக முன் வைப்பதற்கு தயங்கியிருக்கவில்லை கடந்த கால அரசியல், வன்முறை காரணமாக தமிழ் - முஸ்லிம் உறவுகளில் பாரிய இடைவெளி ஏற்பட்டிருந்தது.
இரண்டு தரப்பிலும் ஆழமான மனக் காயங்கள் உண்டு. மனக் காயங்களை ஆற்றுவதற்கு ஒரே வழி இருதரப்பும் மனம் விட்டு உரையாடுதலே! அதற்கான களங்கள் பல இடங்களில் பல வழிகளில் திறக்கப்படுதல் அவசியம். இந்த உரையாடல்களினூடாக தவறுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கும்.
சிவில் அமைப்புகள் இதற்கான ஆரம்ப முயற்சிகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே! முரண்பாடு தீர்த்தல் என்பது இன்று முக்கிய கற்கை துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையிலும் பல பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கற்கை நெறிகள் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தமிழ் - முஸ்லிம் ஐக்கியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறை இது தொடர்பான கற்கை நெறியினை முதுமாணிக்கற்கை மாணவர்களுக்கு மேற்கொள்கின்றது. முரண்பாடு தீர்த்தல் பல படிமுறைகளைக் கொண்டது. முரண்பாட்டை தணித்தல், புதிய முரண்பாடுகள் வளர விடாமல் தடுத்தல், மனம் விட்டு உரையாடுதல், அதிகம் முரண்படாத விடயங்களில் முதலில் இணங்கிப் போதல், பெரிய முரண்பாடுகளை காலம் எடுத்து உரையாடுதல் என்பன இப் படி முறைகளில் உள்ளன.
தமிழரசுக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்சுடன் இணைந்து கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியைப் பொறுப்பேற்றுமை, உள்;ராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்கின்றமை, யாழ் மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடம் கொடுத்தமை என்பவையெல்லாம் முரண்பாடுகளை களைய எடுத்த முயற்சிகளே! தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் பல காரணங்களுக்காக இன்று அவசியமாகின்றது. அதில் முதலாவது இரண்டு இனங்களும் இன்று இலங்கைத் தீவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாக உள்ளன.
முஸ்லிம்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டனர் ஆனால் சில சலுகைகளை பெற்றிருந்தார்களே ஒரு இனத்தின் உரிமைகள் என்ற வகையில் பெரிதாக எவற்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. கோத்தபாய ஆட்சியின் போது முஸ்லிம் மக்கள் மிகமோசமாக ஒடுக்கப்பட்டனர்.

இரண்டாவது இரண்டு இனங்களும் ஒரே தாயகத்தில் வாழ்பவர்களாக உள்ளனர்.
ஒரே தாயகத்தில் வாழ்பவர்கள் தங்களுக்குள் முரண்பாட்டுக் கொண்டு நீண்ட காலம் அமைதியாக வாழ முடியாது. பொருளாதார ரீதியாகவும,; புவியியல் ரீதியாகவும் இணைந்து வாழுதல் அவசியமாக உள்ளது.
தவிர பேரின வாத ஒடுக்கு முறைக்கும் முகம் தனித்தனியாக முகம் கொடுக்க முடியாது. கிழக்கில் இரண்டு இனங்களும் ஐக்கியப்பட்டிருத்தால் சிங்களக்குடியேற்றங்களையும் தடுத்திருக்க முடியும். இன்று கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் கிடைக்காமல் மமுஸ்லிம் மக்களுக்கும் கிடைக்காமல் இருக்கின்ற நிலை வளர்ந்து வருகின்றது.
அம்பாறை மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் இந்நிலை ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது எனலாம். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்கள் தனித்து போராடுவது என்பது அரசியல் அறநெறிகளுக்கும் ஏற்ற ஒன்றல்ல. தமிழரும் சிங்களவரும் மோதினால் நாங்கள் நீந்துவோம் தமிழரும் சிங்களவரும் ஐக்கியப்பட்டால் நாங்கள் மூழ்குவோம் என்ற முஸ்லிம்களின் அரசியலை பேராசிரியர் அமீர் அலி போன்றவர்களே கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அரசியல் தீர்விற்காக நாம் எதுவும் முயற்சிக்கத் தேவையில்லை. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் போது முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கும் என அஸ்ரப் ஒரு தடவை கூறினார்.
இந்தப் போக்கும் அரசியல் அறநெறிக்கு ஏற்றதல்ல. உழைக்காமல் உண்ண முடியாது. அதேபோல போராடாமல் உரிமைகளை அனுபவிக்க முடியாது. தாயகத்தை பாதுகாப்பதில் இரண்டு இனங்களுக்கும் சம பொறுப்பு உண்டு.
தொடர் ஆக்கிரமிப்புகள்
மூன்றாவது இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் புதுவித அரசியலை முன்னெடுக்கின்றது. சோசலிச சொல்லாடல்களை உரத்துக் கூறுவதன் மூலம் இரண்டு இனங்களினதும் அடையாள அரசியலை பெருந்தேசிய வாதத்திற்குள் கரைப்பதற்கு முயற்சிக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களும் தங்களது கட்சிகளின் மீதுள்ள அதிர்ப்தியினால் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இழுபட்டுச் செல்லப் பார்க்கின்றனர். தமிழர்களின் கோட்டையான யாழ்ப்பாண மாவட்டமும் முஸ்லிம்களின் கோட்டையான அம்பாறை மாவட்டம் தேசிய மக்கள் சக்தியின் அலைகளுக்கு நின்று பிடிக்க முடியாமல் திணறுகின்றது.

சிங்கள அரசுருவாக்கம் என்பது பேரினவாத கருத்து நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் எந்த சிங்களக் கட்சியும் பேரினவாத கருத்து நிலையிலிருந்து விடுபடப் போவதில்லை. வவுனியா வடக்கு பிரதேசங்களில் இடம்பெறுகின்ற தொடர் ஆக்கிரமிப்புகள் இதனையே வெளிப்படுத்துகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது விடயத்தில் முதுகெலும்பு இருப்பதாகக் கூறி விட முடியாது. வடக்கு - கிழக்குக்கென தமிழ் மக்கள் முன்னெடுக்கும் அரசியலோடு முஸ்லிம் மக்கள் இல்லை. இது யதார்த்த நிலையாகும். முரண்பாட்டுக்கு முக்கிய காரணமே இதுதான்.
இது விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கு பல தடைகள் உண்டு என்பது உண்மையே! அதில் முதலாவது தந்தை செல்வா ஆரம்பித்து வைத்த தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டோடு முஸ்லிம் மக்கள் இணைவதற்கு தயாராக இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சிக் காலத்தில் முஸ்லிம்களில் சிலர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்திருந்தனர் ஆனால் முஸ்லிம் சமூகம் தமிழரசுக் கட்சிக்கு வெளியே தான் நின்றது. ஆயுதப் போராட்ட காலத்தில் சில முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்திருந்தனர். சிலர் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தனர்.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் இதில் அதிகளவு பங்களித்திந்தனர். பலர் மரணமாகியும் இருக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் வெளியே தான் நின்றது.
தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு தமிழ் மக்களுக்கு பொறுப்பையும், முஸ்லிம் மக்களுக்கு பொறுப்பின்மையும் விதித்தது. தமிழ் மக்களுக்கு விதிக்கப்பட்ட பொறுப்பு காரணமாக தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாடு கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கை விலங்காகியது.
இவ் விலங்கு நிலை கிழக்கில் பலத்த இழப்புகளை அவர்களுக்கு உருவாக்கியிருந்தது. இரண்டாவது தடை முஸ்லிம்கள் இலங்கைத் தீவில் வாழும் முழு முஸ்லிம்களுக்கான அரசியலையே முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு - கிழக்கிற்;கென தனியான அரசியலை முன்னெடுக்கவில்லை. யதார்த்தத்தில் தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ வேண்டியவர்கள் வட - கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு இணைந்து வாழ வேண்டியவர்கள.; இதற்கேற்ப இரண்டு அரசியலை பின்பற்றியிருக்கலாம். வடக்கு - கிழக்குத் தமிழர்கள் மலையகத்திற்கான அரசியலை தாங்கள் முன்னெடுக்க முனையவில்லை.
அதனை மலையகத் தரப்பினரிடையே விட்டிருந்தனர். பரஸ்பரம் ஆதரவு நிலை கட்டியெழுப்பப்பட்டது. இந்த நிலையை முஸ்லிம் அரசியலும் கட்டியெழுப்பியிருந்தால் வடக்கு - கிழக்கு தமிழர் அரசியலோடு இணைவது அவர்களுக்கு கடினமாக இருந்திருக்காது. தெனிலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சமும் ஏற்பட்டிருக்காது. வடக்கு - கிழக்கினை இரண்டு சமூகங்களும் இணைந்து பாதுகாத்திருப்பர்.
மூன்றாவது தடை அரசியல் வரலாற்று இடைவெளியாகும். தமிழ் மக்கள் 30 வருடங்கள் அகிம்சா ரீதியான எதிர்ப்பு அரசியலையும் தொடர்ந்து 30 வருடங்கள் ஆயுத ரீதியான எதிர்ப்பு அரசியலையும் மேற்கொண்டிருந்தனர்.
வர்த்தகப் பொருளாதாரம்
தற்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் கூட தொடர்ந்து 15 வருடங்கள் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். தமிழர்களின் எதிர்ப்பு அரசியலுக்கு வயது 75 எனலாம். இந்த எதிர்ப்பு அரசியல் ஒரு பொதுப் போக்காகவே வளர்ந்து வந்தது.
ஆளும்கட்சி அரசியலை மேற்கொள்பவர்கள் துரோகிகளாகவே பெரும்பான்மை தமிழ் மக்கள் கருதினர் ஆனால் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலத்திலிருந்து ஆளும் கட்சி அரசியலையே மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் ஆளும்கட்சி அரசியலுக்குள் ஒரு எதிர்க்கட்சி அரசியலை மேற்கொண்டாலும் நீண்ட காலத்திற்கு அதனை தொடர முடியவில்லை. ஒருவகையில் இந்த இரட்டை அரசியலே அவரது மரணத்துக்கும் காரணமாக்கியது எனலாம். எதிர்ப்பு அரசியல் வளராததினால் முஸ்லிம்களின் அரசியல் சலுகை அரசியலாக இருந்ததே தவிர உரிமை அரசியல் என்ற கட்டத்திற்கு வளரவில்லை. அவர்களது எதிர்ப்பு அரசியல் என்பது தமிழர்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டது.
முஸ்லிம் தேசியவாதம் பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக உருவாகவில்லை. தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவே உருவானது. நான்காவது முஸ்லிம்களது வர்த்தக - பொருளாதார நலன்களும் தடையாக இருந்தன. அவர்களது வர்த்தக நலன்கள் அதிகளவில் தென் இலங்கையினையே மையங் கொண்டிருந்தது. தமிழ் அரசியலோடு இணைவதனால் இந் நலன்கள் பாதிப்படைவதை அவர்கள் விரும்பவில்லை.
இத்தனைக்கும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு இருந்தது போல வர்த்தகப் பொருளாதாரம் அடிப்படைப் பொருளாதாரமாக வடக்கு - கிழக்கு முஸ்லிம்களுக்கு இருந்தது எனக் கூற முடியாது. தமிழர்களைப் போல விவசாயமும், மீன்பிடியுமே வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் அடிப்படை பொருளாதரமாக இருந்தது.
ஐந்தாவது கடந்த கால கசப்புணர்வுகளாகும். ஆயுதப் போராட்டம் முஸ்லிம் தமிழ் உறவினை துருவ நிலைக்கு தள்ளியது இதன் விளைவான வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும் இத்துருவநிலையினை மேலும் அதிகப்படுத்தியது. இரு பக்கமும் நிகழ்ந்த தொடர் உயிரிழப்புக்களும் இதனை கடினமாக்கியது. சிங்கள ஆட்சியாளர்களும் இத்துருவ நிலையினை நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.
இத்துருவநிலை காரணமாக வடக்கு - கிழக்கு இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மையாக்கும் என அவர்கள் அஞ்சினர். தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்திற்காக முயற்சிக்கும் போது தமிழத்; தரப்பும் சில கோட்பாட்டு முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
அதில் முதலாவது வடக்கு - கிழக்கு தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் தாயகம் என்பதை உள ரீதியாக ஏற்றுக் கொள்வதாகும். ஒரே தாயகத்தில் வாழும் இரண்டு தேசிய இனங்களாகவே இரண்டு இனங்களையும் கருதுதல் வேண்டும். தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை இரண்டு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடாகவே அணுகுதல் வேண்டும். இது விடயத்தில் “தமிழ் பேசும்” மக்கள் என்ற கோட்பாட்டை முழுமையாகக் கைவிடல் வேண்டும்.
முஸ்லிம்கள் தங்களை தனியாக தேசிய இனமாக கருதுகின்றார்களே தவிர “தமிழ் பேசும் மக்கள்” என்ற அடையாளத்திற்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் விரும்பாத ஒன்றை அவர்கள் மீது திணிக்க முற்படுவது அரசியல் அறம் அல்ல இரண்டாவது கடந்த காலத்தவறுகளை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதற்கு இருதரப்பும் தயங்கக்கூடாது.
அரசியல் தீர்வு
தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல், அதற்காக மன்னிப்பு கோருதல் என்பன உயர்ந்த மனித விழுமியங்களாக இருக்குமே தவிர தேசிய இனங்களை கௌரவத்தினையும் மதிப்பினையும் என்ற சந்தர்ப்பத்திலும் குறைத்துவிட முடியாது.
தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல் இரு பக்க செயற்பாடாக இருப்பது அவசியம். அரசியல் தீர்வு என வரும்போது தமிழ் மக்களுக்கு தாயக ஒருமைப்பாடு மிக அவசியம். இந்த ஒருமைப்பாடு இல்லாமல் தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் ஒருபோதும் பேண முடியாது.
எனவே இணைந்த வடக்கு - கிழக்கிற்குள் முஸ்லிம் அதிகார அலகு பற்றி அவர்களுடன் கலந்துரையாடலாம். முஸ்லிம் மக்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாயின் தமிழ் மக்களின் பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையில் இணைத்தல் என்ற முடிவிற்கு தமிழ்த் தரப்பு செல்லுதல் வேண்டும்.
இந்த முடிவு முஸ்லிம்களை ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. அவர்களின் சம்மதமும் அதற்குத் தேவையற்றது. நிலத்தொடர்ச்சியற்ற வகையில் இணைக்கும் போது வரும் சிறு சிறு பிரச்சனைகளை பேசித் தீர்க்கலாம். எல்லாவற்றிக்கும் முக்கியம் தொடர்ச்சியான உரையாடலே! இரு இனங்களின் தலைமைகளும் இதனை கவனத்தில் கொள்வது நல்லது.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam