பொது வேட்பாளர் விடயம் சாத்தியமற்றது: டக்ளஸ் தரப்பு விசனம்
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் நேற்று(04.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கான காலங்கள் நெருங்கிவரும் சூழலில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சிகளுடைய ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் முடிவுறாத நிலை காணமுடிகின்றது.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ரெலோ அமைப்பு கிழக்கில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதிலிருந்து பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு நிலவவில்லை என்பது புலனாகின்றது.
ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு நிலைப்பாடும் அதற்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களில் கருத்துக்களும் நிலவிவருகின்றது.
பொதுத் தேர்தல்
ஆயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அதில் ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமாகவே இந்த பொது வேட்பாளர் என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவும் அடுத்த நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் உள்ளனர்.

இதில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற ஆசனங்களை கருத்தில் கொண்டு இக்கட்சிகள் பொது வேட்பாளர் தொடர்பில் முனைப்புக் காட்டுகின்றனர்.
ஜனாதிபதி என்பது நாட்டின் இறைமை, அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த தேர்தலில் தென்னிலங்கை தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே ஜனாதிபதியாக முடியும் என்பதும் இப்பொது வேட்பாளர் தொடர்பில் பேசுகின்ற தரப்பினருக்கு தெரியாத விடயமல்ல.

ஆயினும், தத்தமது நலன்களிலிருந்தே அவர்கள் இந்த நாடகத்தை அரங்கேற்றி பிழைப்பு நடத்த முனைகின்றனர்.
எனவே பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri