ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் அவசியம்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா
இன்றைய அரசியல், பொருளாதார சூழமைகளில் தமிழ் மக்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தவும், உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்கள்
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காலங்காலமாக நாங்கள் ஜனாதிபதித் தேர்தல்களில் யாரேனும் ஒரு பெரும்பான்மைக் கட்சியின் வேட்பாளரையே ஆதரித்து வந்துள்ளோம்.
ஆனால் அது எத்தகைய மோசமான முடிவென்பதை வரலாறு பட்டுணரச் செய்தபின்னும் கூட, இன்னும் அதிலிருந்து பாடம் கற்கத் தயாரற்றவர்களாகவே நாம் உள்ளோம். எமது இனத்தை அழித்த இறுதிப்போரை முன்னின்றி நடத்திய சரத் பொன்சேகாவையும், அந்த இறுதிப்போரின் கடைசி நாள்களில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த மைத்திரிபால சிறிசேனவையும், கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவையும் ஆதரித்து கடைசியில் என்ன கண்டோம்?
அவர்கள் எங்கள் வாக்குகளைப் பெற்றுவிட்டு, சராசரிப் பேரினவாதப் போக்குடனேயே தமிழர் பிரச்சினைகளை அணுகினரே தவிர, எமது வாக்குகளும் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ற நன்றி சிறிதும் காட்டவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகள்
இப்படி பேரினவாதக் கட்சி களமிறக்கும் வேட்பாளர்களுக்கு நம்பி வாக்களித்து ஏமாறுவதை இனியும் தொடர்வது இனத்தின் இருப்புக்கு ஆரோக்கியமல்ல. அப்படியானால் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி எழலாம். தமிழ்க் கட்சிகளால் ஒரு பொதுவேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்மக்களின் வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் கிடைத்தாலும் கூட அந்த வேட்பாளரால் வெற்றிபெற முடியாதென்பது வெளிப்படையானதே.
ஆனாலும் அந்தத் தோல்வியிலும் நாம் சில வெற்றிகளை அடையமுடியும். தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும், தமிழ் மக்களின் அபிலாழசை இலங்கையின் பெரும்பான்மைப் போக்குக்கு மாறானது எனவும், உரிமைக்கான எமது ஒன்றுபட்ட வேட்கையையும் பொதுவேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் நாம் உணர்த்தமுடியும்.
அப்படி அவர்கள் உணராவிட்டாலும் அதுகுறித்து நாம் கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் பேரினவாதக் கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்களித்தாலும் ஏதும் அதிசயம் நிகழ்ந்துவிடப்போவதில்லையே? ஆனால் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், பேரினக்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்கும் கருத்து நிலையை தமிழ்மக்களிடம் சிலர் விதைக்க முனைகின்றனர்.
பேரினவாத ஆட்சியாளர்கள்
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருதுகோள் முளையில் இருக்கும்போதே, அது ராஜபக்சக்களின் சதி என்று பதறுகின்றனர். தங்களின் திட்டங்கள் பாழாகிவிட்டமையும், கிடைக்கவேண்டிய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமுமே இந்தப் பதற்றத்துக்கு மிகமுக்கியமான காரணங்கள்.
ஆனால் உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணைசெய்கிறார்கள் என்பதே உண்மை, மீண்டுமொருமுறை மக்களைப் படுகுழிக்குள் தள்ளிவிடவே இவர்கள் எத்தனிக்கின்றனர்.
எனவே இந்தத் திசைமாற்றல்களுக்கு எடுபடாமல், பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவோடு ஒன்றித்து, எமது உரிமைக்குரலை உலகறியச் செய்வதே காலப்பொருத்தம்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே. தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து கட்சியே இறுதி முடிவெடுக்கும், அந்த முடிவு கடந்த காலங்களைப் போல மீண்டும் இருண்ட யுகத்துக்குள் எமதினத்தை மூழ்கடிக்காமல், ஒளிமயமானதாக, தீர்க்கமானதாக அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |