பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வர்த்தகர் உட்பட தமிழர்கள் இருவர் கைது
பல இலட்சம் ரூபாவினை இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறைக்கு தேவையான உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான விலை மனுக்கோரல் தொடர்பிலேய இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விலை மனுக்கோரல்
முறையீட்டாளருக்கு தொடர்பான விலை மனுக்கோரலை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபரால் தனது தந்தையின் மற்றும் மாமாவின் பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த விலை மனுக்கோரல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டிருந்தது.

அது பின்னர் 25 லட்சம் ரூபாவாகவும், இறுதியில் 20 இலட்சம் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, 20 லட்சம் ரூபாய் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணகிரிநாத் லோகேந்திரன் மற்றும் லோகேந்திரன் சிவராஜி ஆகிய இருவரும் நேற்று இரவு கம்பளை தபாலகத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைக் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.