புகையிலை கம்பனிகளின் தந்திரோபாயங்கள்: போதைப்பொருள் எதிர்ப்பு கூட்டமைப்பினர் விசனம் (video)
யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் வடக்கு மற்றும் கிழக்கை நாங்கள் வெற்றி கொண்டுள்ளோம் என்று புகையிலை கம்பனிகள் கூறியிருந்தன, அதாவது முதல் இருந்த சந்தை வாய்ப்பை விட தற்போது அதிகளவிலான சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறியிருந்தது என போதைப்பொருள் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று (14.02.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தினை கூறியுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், புதிதாக கிடைத்த இந்த சந்தை வாய்ப்பில் 5.1 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி
யுத்தம் முடிந்த பின்னர் புகையிலை கம்பனிகள் தந்திரோபாயங்களை மேற்கொண்டு இளைஞர்களை புகைத்தலுக்கு பழக்குகின்றனர்.
இலங்கை நாட்டை பொறுத்தவரை பாரிய பொருளாதார நெருக்கடியால் அனைவருக்கும் பிரச்சினை இருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கு எங்களது நாட்டில் பணமில்லை.
இவ்வாறு இருக்கையில் சிகரெட் வரிக் கொள்கையை நாங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்றால் முதலாவதாக விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
சிகரெட்டுக்கான வரிக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் எந்தமாதிரியான நன்மைகள் அரசாங்கத்திற்கு கிடைக்கும், அதேமாதிரி பொதுமக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கப்பெறும் என்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




