சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! விரைவில் முடிவு
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை பதவி விலகுமாறு பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இந்தச் சம்பவம் நடக்கும்போது அவரே கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாக இருந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
எனினும், அவர் பதவி விலகவில்லை. அரசும் அவரைப் பதவி நீக்கவில்லை. அதனால் தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரேரணையையைச் சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையை சபையில் முன்வைக்குமாறு நாம் சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியும் எனச் சட்டமா அதிபர் கூறினார் என எமக்குத் தகவல் கிடைத்தது.
அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஆவணத்தைக் கோரினோம். எனினும், அது வழங்கப்படவில்லை. பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை
எனினும், சபாநாயகர் அரசியல் முடிவொன்றை எடுத்து அதனை நிராகரித்துள்ளார். இது அரசைப் பாதுகாக்கும் செயலாகும். இந்த விடயத்தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டுள்ளார்.
அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அப்படி இருந்தும் எதற்காக விவாதத்தக்கு அஞ்ச வேண்டும்?
இந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் ஆளுங்கட்சியில் உள்ள சிலருக்குக் கடந்த அரசுகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகும். இதனால் தான் ஆளுங்கட்சி அஞ்சுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




