ரி20 உலகக் கிண்ண சர்ச்சை : நிலைப்பாட்டை மாற்றிய பங்களாதேஷ் விளையாட்டு ஆலோசகர்
ரி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணி பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவில், பங்களாதேஷ் அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஆசிப் நஸ்ருல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்தியாவிற்குச் சென்று விளையாட வேண்டாம் என்ற முடிவை அரசாங்கமே எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது அவர் முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக
"உலகக் கிண்ணத்தில் விளையாடாதது குறித்து வருத்தம் அடையத் தேவையில்லை. நாட்டின் கிரிக்கெட் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையும் (BCB) வீரர்களும் இணைந்து எடுத்த முடிவே இது," என அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி, பங்களாதேஷ் விளையாட வேண்டிய போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்தே பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகியது. ஆரம்பத்தில் இது அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என விமர்சனங்கள் எழுந்தன.
போட்டியைப் புறக்கணித்த சர்ச்சை
வீரர்களுடனான சந்திப்பின் போது, அவர்களுக்கு தெளிவுபடுத்தவே அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாக முன்னர் கூறியிருந்த ஆசிப் நஸ்ருல், இப்போது அந்தப் பழியை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் மீது சுமத்தியுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது போட்டியைப் புறக்கணித்த சர்ச்சையைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணி மீது எந்தவித தடைகளையும் விதிக்கப்போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
"எங்கள் மீது தடைகள் விதிக்கப்படாது என்பதும், எதிர்காலத்தில் சர்வதேச தொடர்களை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் மிகப்பெரிய சாதனையாகும். இதற்காக நான் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு தலைவணங்குகிறேன்," எனவும் ஆசிப் நஸ்ருல் பாராட்டியுள்ளார்.