அறிகுறியின்றி பரவும் அபாயம்! மக்களே அவதானம்
கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நபர்கள் 12 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 12 பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டானை நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யு.டி.குலதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்டானை மற்றும் அந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு வயதுடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, தொற்றுக்குள்ளான இவர்கள் 12 பேருக்கும் எந்தவொரு நோய் அறிகுறியும் இருக்கவில்லை.
அவர்கள் இதற்கு முன்னர் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணி இருக்கவில்லை என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர். அறிக்கை நேற்று முன்தினம் (21) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றுக்குள்ளான 12 பேரும் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



