அவுஸ்திரேலிய- சிட்னி நகரம் அமைதி மற்றும் ஒற்றுமை என்ற செய்தியுடன் புத்தாண்டை வரவேற்றது
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம், சமீபத்தில் போண்டாய் கடற்கரையில் (Bondi Beach) நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சுவடுகள் மறையும் முன்பே, "அமைதி மற்றும் ஒற்றுமை" என்ற செய்தியுடன் புத்தாண்டு 2026-ஐ வரவேற்றது.
உலகப்புகழ் பெற்ற சிட்னி ஹார்பர் பாலம் (Sydney Harbour Bridge) முழுவதும் அமைதியை வலியுறுத்தும் வெண்மை நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மௌன அஞ்சலி
மேலும், தாக்குதலுக்குள்ளான யூத சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலத்தின் தூண்களில் யூத மதச் சின்னமான 'மெனோரா' (Menorah) ஒளிப்படம் திரையிடப்பட்டது.
கடந்த டிசம்பர் 14-ம் திகதி ஹனுக்கா பண்டிகையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டிருந்தன.

சிட்னி நகர் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுவாக அவுஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை ஏந்திய பொலிஸார், ஒப்பேரா ஹவுஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரவு 11:00 மணியளவில் இசை மற்றும் பார்ட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தாக்குதலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புத்தாண்டு 2026
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மொபைல் போன் விளக்குகளை ஒளிரச் செய்து அஞ்சலியில் பங்கேற்றனர்.
இத்தகைய அசாதாரண பாதுகாப்புச் சூழலை சிலர் சங்கடமாக உணரக்கூடும் என்றாலும், மக்களின் பாதுகாப்பிற்காக இதில் சமரசம் செய்ய முடியாது என்று நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.

நள்ளிரவு பிறந்ததும், சிட்னியின் பாரம்பரியமான பிரம்மாண்ட வாணவேடிக்கைகள் வானைப் பிளந்தன.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து புத்தாண்டைக் கொண்டாடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, லட்சக்கணக்கான மக்கள் ஹார்பர் பகுதியில் குவிந்தனர்.
சிட்னியில் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத் தொடர், அடுத்தடுத்து துபாய், லண்டன் மற்றும் நியூயோர்க் என உலகெங்கும் தொடர்ந்தது.