நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது துநாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்களின் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதுவருட ஆசிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
செய்தி - குமார்
மலையகம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி சமாதனம் சகவாழ் வேண்டி மலையக இந்து ஆலங்களில் விசேட புத்தாண்டு பூஜை இன்று அதிகாலை இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மலரந்துள்ள புதிய புத்தாண்டினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, விசேட அலங்கார பூஜை, சூரிய சந்திர வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இடர் நீங்கி இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
இதில் பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சற்குண சன்மதுர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
செய்தி - மலைவாஞ்சன்
யாழ்ப்பாணம்
யாழ். மறைமாவட்ட வரலாற்று சிறப்புமிக்க செம்பியன்பற்று பங்கின் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் புதுவருட பிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11மணியளவில் திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி ஆரம்பமாகி காலை 1:30 மணியளவில் திருப்பலி நிறைவு பெற்றது.
இவ் திருப்பலியில் பொது மக்கள் வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அருட்தந்தை யினர் அருட்சகோதரி யினர் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - எரிமலை
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2026ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு கிளிநொச்சி பங்குத் தந்தையின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன.
இதன்போது இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டது.


செய்தி - சுடரோன்
மன்னார்
மன்னாரில் நேற்றைய தினம் புதுவருட வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் நகர பகுதிக்கு வருகை தந்து ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.
நத்தார், புதுவருட பண்டிகையை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கேள்வி கோரல் மூலம் இடம் ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
இந்த நிலையில் இம்முறை உள்ளூர் மற்றும் தென் பகுதி வர்த்தகர்கள் இடங்களை பெற்று பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசேட நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து நேற்று (31) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர். மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








