பெண்கள் ஸ்லோப்ஸ்டைல் போட்டி: தங்க பதக்கம் வென்ற சுவிட்சர்லாந்தின் கிரேமாட் லிவிக்னோ
இத்தாலியின் லிவிக்னோ (Livigno) நகரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 'ஸ்லோப்ஸ்டைல்' (Slopestyle) ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் போட்டியில், சுவிட்சர்லாந்தின் மதுய்ல்ட் கிரேமாட் (Mathilde Gremaud) தனது ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த 2022 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கிரேமாட், இம்முறையும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோப்ஸ்டைல் போட்டி
இந்தப் போட்டியின் தொடக்கத்தில், பெண்களுக்கான ஸ்கீயிங் வரலாற்றில் முதல் முறையாக 'நோஸ் பட்டர் டபுள் கார்க் 1260' (nose butter double cork 1260) என்ற மிகவும் கடினமான வித்தையை (Trick) நிகழ்த்தி கிரேமாட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது மூன்று அரை சுற்றுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான வான்வழி சாகசமாகும்.

இதன்படி, சீனாவின் நட்சத்திர வீராங்கனை எய்லின் கு (Eileen Gu), தனது முதல் சுற்றில் 86.58 புள்ளிகளைப் பெற்று கடும் சவாலை உருவாக்கினார்.
இருப்பினும், கிரேமாட் தனது இரண்டாவது சுற்றில் 86.96 புள்ளிகளைப் பெற்று எய்லின் கு-வை முறியடித்து வெற்றிப் பெற்றுள்ளார். எய்லின் கு தனது கடைசிச் சுற்றில் கீழே விழுந்ததால், அவர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
அதே போன்று, கனடாவின் 24 வயது வீராங்கனை மேகன் ஓல்ட்ஹாம் (Megan Oldham), தனது இரண்டாவது சுற்றில் பலத்த விபத்தைச் சந்தித்த போதிலும், மன உறுதியுடன் மூன்றாவது சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு 76.46 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
