சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த ஈழத்து சைவத்தமிழ் சமூகம்
கிரான்ஸ்-மொண்டானாவில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, சுவிட்சர்லாந்து ஈழத்து சைவத்தமிழ் சமூகம் ஆழ்ந்த வலியுடனும் மரியாதையுடனும் அஞ்சலி செலுத்தியது.
குறித்த நிகழ்வு நேற்று(9.1.2026) பேர்ன் நகரில் அருள்ஞாமனமிகு ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டு தை முதலாம் திகதி சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள கிரான்ஸ்-மொண்டானாவில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட பேரழிவான தீவிபத்தில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கடுமையாக காயமடைந்தனர்.
தீ விபத்து
இந்தப் பேரிடர் சம்பவம் சுவிட்சர்லாந்து முழுவதையும் மட்டுமன்றி, உலகளாவிய அளவிலும் ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்த துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களை மரியாதையுடன் நினைவுகூரும் வகையில், சுவிட்சர்லாந்து நடுவணரசின் தலைவர் காய் பார்மலேன் நேற்றைய தினத்தை தேசிய துக்க நாளாக அறிவித்திருந்தார்.

இந்நாள், பாதிக்கப்பட்டவர்களிடம் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துவதற்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் ஒற்றுமையும் உள ஆதரவும் வெளிப்படுத்துவதற்குமான நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
ஈழ மண்ணை வேராகக் கொண்ட சைவநெறிக்கூடம், சுவிற்சர்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் சைவத்திருமன்றமாகவும், பேர்ன் நகரில் அமைந்துள்ள “பல்சமய இல்லத்தின்” கூட்டாளி அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
தேசிய துக்க நாள்
சுவிட்சர்லாந்து அரசின் அழைப்பை மதிப்புடன் ஏற்று,நேற்று கடைப்பிடிக்கப்பட்ட தேசிய துக்க நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் சைவநெறிக்கூடமும் நினைவு வணக்கம் ஆற்றியும், ஈடேற்ற வழிபாடு நடாத்தியும் பங்கேற்றது.
இதன்போது, பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் திருக்கோவில் மணி 1 நிமிடத்திற்கு ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நிமிட அகவணக்கம் திருக்கோவிலிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன் நிறைவாக கருவறையில் செந்தமிழ் திருமறை மரபின்படி சிறப்பு வழிபாடு நால்வர் தேவாரங்கள் ஓதப்பெற்று நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களது உயிர்கள் ஈடேற வேண்டியும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆற்றல், ஆறுதல் மற்றும் நம்பிக்கையை எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டியும் கூட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
ஆழ்ந்த இரங்கல்
மேலும், “சுவிட்சர்லாந்து இந்து–சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம்” சுவிற்சர்லாந்து அரசின் அழைப்பை ஏற்று, தேசிய துக்க நாளில் ஒற்றுமையுடன் பங்கேற்குமாறு நாட்டிலுள்ள அனைத்து திருக்கோவில்களையும் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் சுவிட்சர்லாந்து சைவத்தமிழ் சமூகம் சுவிட்சர்லாந்து சமூகத்துடன் தமது ஆழ்ந்த ஒற்றுமையையும், மாந்தர் அன்பு, சமூக ஒற்றுமை மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் தெளிவான செய்தியை இந்த தேசிய துக்கக் காலத்தில் வெளிப்படுத்தியது.
சைவநெறிக்கூடம் இவ் எதிர்பாராத பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டு, உயிரிழந்த அனைவரையும் நினைவில் ஏந்தி, அவர்களின் உயிர் ஈடேற்றத்திற்காக ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கர் அருளை வேண்டி வணங்கியது.






சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri