ஈரானில் 13ஆவது நாளாகத் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம்
ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம் 13ஆவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.
போராட்டக்காரர்களைக் கடுமையாகச் சாடியுள்ள அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை சமூக விரோதிகள்" என விமர்சித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28ஆம் திகதி ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
போராட்டம்
இதனால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தெஹ்ரானில் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது.
போராட்டம் குறித்துப் பேசிய உச்ச தலைவர் அலி கமேனி, "வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஒரு கூட்டமான சமூக விரோதிகள் (Vandals). இவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மகிழ்விப்பதற்காகச் செயல்படுகிறார்கள்," என்று குற்றம் சாட்டினார்.

மறுபுறம், போராட்டக்காரர்கள் மீது ஈரான் இராணுவம் வன்முறையைப் பிரயோகித்தால், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் முன்னாள் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையச் சேவை
இதேவேளை தகவல்கள் வெளியே கசிவதைத் தடுக்க ஈரான் அரசு நாடு முழுவதும் இணையச் சேவையை முடக்கியுள்ளது.
அத்துடன் சர்வதேச ஊடகங்கள் மற்றும் பிபிசி செய்தியாளர்கள் ஈரானுக்குள் செய்தி சேகரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதனால், அங்கு நடக்கும் உண்மையான நிலவரங்களை அறிய சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களையே உலகம் நம்பியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
போராட்டக்களத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுவதால் ஈரான் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.