சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள சுரங்கத் தொழிலை தேசிய பாதுகாப்பு நலனாக அறிவித்தது சுவீடன்!
சுரங்கத் தொழில் மற்றும் அபூர்வ கனிமங்களின் அகழ்வாராய்ச்சியைத் தனது 'தேசிய பாதுகாப்பு நலனாக' சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனா மீதான அதிகப்படியான சார்ந்து வாழும் நிலையைத் தவிர்க்கவும், புதிய சுரங்கக் கொள்கையை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுத்தமான ஆற்றல் உற்பத்தி, பாதுகாப்புத் துறை மற்றும் மின்சார வாகனத் தயாரிப்பிற்குத் தேவையான அபூர்வ கனிமங்களை வெட்டி எடுப்பதிலும், அவற்றைச் சுத்திகரிப்பதிலும் சீனா உலக அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தேசிய பாதுகாப்பு
ஐரோப்பிய தொழில் துறை சீனா மீது கொண்டுள்ள இந்த அதிகப்படியான சார்பு ஒரு 'கட்டமைப்பு அபாயம்' என்று சுவீடன் துணைப் பிரதமரும் தொழில்துறை அமைச்சருமான எப்பா புஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவீடனில் உள்ள 'பெர் கெய்ஜர்' பகுதி, 120 கோடி டன் தாது வளங்களையும் 22 இலட்சம் டன் அபூர்வ கனிம ஒக்சைடுகளையும் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.
சுரங்கத் தொழிலைத் தேசிய பாதுகாப்பு நலனாக அறிவிப்பதன் மூலம், திட்டமிடுதல் மற்றும் அனுமதிகளை விரைவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்க முடியும் என அரசு நம்புகிறது.
புதிய நடவடிக்கை
இந்த புதிய நடவடிக்கை சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு திறன்களை கணிசமாக உயர்த்தும் என்றும், சுரங்க திட்டங்களுக்கு அரசு நிலங்களை ஒதுக்குவதை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், சுரங்க விரிவாக்கம் தங்களின் பாரம்பரிய மான்களை மேய்க்கும் வாழ்வியலைப் பாதிக்கும் எனக் கூறி, அப்பகுதியில் வாழும் 'சாமி' பழங்குடியின மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.