பலோகன் சிவப்பு அட்டை சர்ச்சை: ஃபிஃபா மீது நோர்வே அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளிக்கத் தயார்
அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலரின் பலோகனின் தடையை நீக்கிய ஃபிஃபாவின் (FIFA) நடவடிக்கைக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்க நோர்வே கால்பந்து சம்மேளனம் (NFF) முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை "ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டையும் ஆபத்தில் தள்ளியுள்ளது" என்று நோர்வே கால்பந்து தலைவர் லிஸ் கிளாவனஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடரில் போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பலோகன் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
தடை
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, பலோகனின் தடை இடைநிறுத்தப்பட்டது.
இந்த தலையீடு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தப் போட்டியில் பெல்ஜியம் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவைத் தோற்கடித்தது.

அரசியல் தலைவர்களின் தலையீட்டிற்கு ஏற்ப விதிகளை வளைப்பது மிகவும் ஆபத்தான முன்உதாரணமாகிவிடும் என நோர்வே கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லிஸ் கிளாவனஸ் எச்சரித்துள்ளார்.
அடிப்படை விதி
"இதுபோன்ற அடிப்படை விதிகளை மீறும்போது, அது விளையாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும். இந்த முடிவு வெளிப்படையான வெளிப்புற அழுத்தங்களால் எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

ஃபிஃபா தலைமை தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்." மேலும், ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் முகமது அல்-கமாலி, மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, உலகக் கிண்ண தொடரை 64 அணிகளாக உயர்த்த முன்மொழிந்துள்ளதையும் கிளாவனஸ் நிராகரித்துள்ளார்.