வெல்லாவெளியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு பொலிஸாரால் இடைநிறுத்தம் (Video)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25.11.2023) முன்னெடுக்கப்பட இருந்த குறித்த நிகழ்வு வெல்லாவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அங்கு வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின வாரத்தில் அதனுடன் தொடர்புபட்ட எந்த நிகழ்வுகளையும் செய்ய முடியாது என்ற விதத்தில் இத்தடையுத்தரவு பெறப்பட்டு இன்று பிற்பகல் இத்தடையுத்தரவு தொடர்பிலான விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையால் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைக்குமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வு இடைநிறுத்தம்
இதனையடுத்து குறித்த நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தினை நாடி இத்தடையுத்தரவினை நீக்கி நிகழ்வினை குறித்த தினத்திலேயே முன்னெடுப்பதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.