நுவரெலியாவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
நுவரெலியா - பொரலாந்த பகுதியில் வாட்ஸ் அப் செயலியினை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 28 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே நேற்றைய தினம் (28.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, சந்தேகநபரிடமிருந்து விற்பனை செய்யப்பட்ட பின்னர் மீதமாக இருந்த 5,100 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
அத்துடன், குறித்த நபரால் நுவரெலியாவை அண்மித்த பல பிரதேசங்களுக்கு மிக நுணுக்கமான முறையில் பல
நபர்களின் ஊடாக போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் மிகவும் தந்திரமான முறையில் அவருடைய முச்சக்கர வண்டியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, போதைப்பொருள் விநியோக வலையமைப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரின் விபரங்கள் சந்தேக நபரை விசாரணை செய்த போது பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விசாரணை நிறைவடையும் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக நுவரெலியா பிரதான பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |