பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள், திருட்டு சம்பவம், போக்குவரத்து வழக்கு மற்றும் கையடக்க தொலைபேசி திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வழக்குகளில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்றைய தினம் (13.04.2023) கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-அண்ணல் நகரைச் சேர்ந்தவரும் தற்போது திருகோணமலை - ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வரும் 24 வயதுடைய றஹ்மத்துல்லா முகம்மது சுபியான் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நடவடிக்கை
குறித்த சந்தேக நபரைப் பல மாதங்களாக பொலிஸார் தேடி வந்ததாகவும், இதேவேளைக் கைது செய்ய முற்பட்டபோது கையை பறித்து விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைத் திருகோணமலை நீதவான் மன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



