கொழும்பில் போலி காணி ஆவணங்களை தயாரித்து கோடிக்கணக்கில் பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய நபர்
கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை (16) களுத்துறை நகரில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு போலி ஆவணங்கள்
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் 01 கோடி ரூபா பெறுமதியான சொத்தினை விற்பனை செய்து பணத்தை மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.