உண்மைகளைக் கொட்டுவதே சுரேஷ் சலேவுக்குப் பொருத்தம் : நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வெளிப்படுத்துவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய மிகச் சிறந்த செயலாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதுவே ஒரு புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவருக்குப் பெருமையையும் மதிப்பையும் வழங்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக, புலனாய்வுப் பிரதானியை மாற்றுமாறு கோரிப் போராடுவதோ அல்லது தான் தெரிந்து வைத்துள்ள முக்கிய தகவல்களை மறைத்து வைத்திருப்பதோ முற்றிலும் பொருத்தமற்ற செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பாதுகாப்பை வழங்குமாறு
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(16) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "சுரேஷ் சலே தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர் தற்போது எந்தவொரு சாதாரண சிறைக்கூண்டிலும் அடைக்கப்படவில்லை. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உரிய பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பின் கீழ், ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் சாதாரண மருத்துவ சிகிச்சைகளே அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அவருக்கு வைத்தியசாலையில் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறையில் முறையான காற்றோட்டமோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லை எனக் கூறப்படுகின்றது.
கைதிகள் வைக்கப்பட்டிருந்த சாதாரண அறை
எனினும், சுரேஷ் சலேவுக்காக அரசு புதிய சொகுசு அறைகளைத் தயாரிக்கவில்லை. கடந்த அரசுகளின் காலத்திலும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கைதிகள் வைக்கப்பட்டிருந்த அதே சாதாரண அறைகளிலேயே அவரும் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் அங்கு தங்கியிருந்த எவரும் இத்தகைய முறைப்பாடுகளை முன்வைக்கவில்லை.
அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதிகள் எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாள்கள் உணவு உட்கொள்ளாமல், ஊசி மூலம் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் போது இவ்வாறான சாதாரண தொற்றுகள் ஏற்படுவது இயல்பானதே. இதற்கான சிகிச்சைகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.