அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி
"நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
பிரித்தானியா தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினரால் பிரதம மந்திரி வேட்பாளரான லிஸ் ட்ரஸ் அம்மையாருடன் இணையவழி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இணையவழி கலந்துரையாடல்
இந்த இணையவழி கூட்டத்தில் ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, லிஸ் ட்ரஸ் அம்மையாரிடம் இலங்கை தமிழர்கள் நீண்ட காலமாக ஐநாவில் தங்களுக்கான நீதியை கோரி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தங்களுடைய ஆதரவு நிலை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“வெளிவிவகார அலுவலர்களுக்கான செயலாளரைத் தெரிவு செய்கின்ற பொழுது இந்த விடயத்தில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.”என்றும் உறுதியளித்தார்.
பிரித்தானியாவின் உறுதி
அண்மையில் அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டும் பிரேரணையை நிறைவேற்றக் கோரி பிரதான அங்கத்துவ நாடுகளுக்கு வரைபு ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கான பிரேரணையை நிறைவேற்றுவதில் பிரதான நாடாக பிரித்தானியா தலைமை வகிக்கிறது.
பிரித்தானியாவின் எதிர்கால பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில் குறித்த சந்திப்பும் லிஸ் ட்ரஸ் அம்மையாரி்ன் உறுதிமொழியும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.