கச்சதீவு விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம்
கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை வரவேற்பதோடு இனியும் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் தெரிவித்தார்.
இன்று(09.10.2026) யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் தேர்தல் வரும்போது கச்சதீவை மீட்போம், கச்சதீவு தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான கடற் பரப்பு என தமிழக கடற்றொழில் மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்து வருகின்றனர்.
கச்சதீவு விவகாரம்
கடந்த வருட தேர்தலின் போது அப்போதைய தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் கூட தனது பிரச்சாரத்தில் கச்சதீவை மீட்போம் என வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.
நாம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக கூறி வருவது கச்சதீவு எமது கடல் பிரதேசம் எமது எல்லைக்குள் கடற்றொழில் செய்ய வர வேண்டாம் என பலமுறை கூறியிருக்கிறோம்.

ஆனால் தற்போது இந்திய உயர் நீதிமன்றம் தெளிவாக ஒரு விளக்கத்தை கூறி இருக்கிறது.கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது அது தொடர்பில் மத்திய அரசு தனது இலங்கை உடனான நல்லுறவில் இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களில் கச்சதீவை வைத்து அரசியல் செய்ய முடியாது இனியாவது அந்த மக்கள் இதனை நன்கு உணர்ந்து நடக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.