கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல்கள்: அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதா..! சிக்கலில் இலங்கை
உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள, இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ள 19 ஈரானியக் கப்பல்களுக்கு உதவ உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
எந்தவொரு உதவியையும் பரிசீலிப்பதற்கு முன் இலங்கை தனது தேசிய நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும், அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (secondary sanctions) விதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கப்பல் நிறுவனங்களுக்குத் தெரியும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் துஷார ரோட்ரிகோ கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து எந்த எச்சரிக்கையும் வரவில்லை
இருப்பினும், இலங்கை உதவ முடிவு செய்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ஈரான் தூதரகம் இது குறித்த விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஈரானியக் கப்பல்கள் தொடர்பான இந்தச் சமீபத்திய நிகழ்வு, அமெரிக்காவின் டார்பிடோ (torpedo) தாக்குதலால் ஈரானியக் கடற்படைக் கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா' (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டு 87 மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு சுமார் ஏழு மாதங்களில் நடந்துள்ளது.

இந்தியாவின் அழைப்பின் பேரில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு அந்தக் கப்பல் நாடு திரும்பிக்கொண்டிருந்தது. தொழிநுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகக் குழுவினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானியக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இலங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற காயமடைந்த மாலுமிகள் மற்றும் இரண்டாவது கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக ஈரானுக்கு அனுப்பப்பட்டனர்.
சிக்கிக் கொண்ட ஈரானியக் கப்பல்கள்
அந்தக் கப்பல்கள் ஈரானிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் என்றும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியதால் ஈரானியக் கப்பல்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களாக அவை இலங்கைக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச விவகார ஆய்வாளர் தயான் ஜெயதிலக தெரிவிக்கையில், நாங்கள் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளோம். நடைமுறையில் இலங்கையால் செய்யக்கூடியவற்றிற்கு சில எல்லைகள் உள்ளன. நாங்கள் வேண்டுமென்றே உதவ மறுக்கவில்லை என்பது உலகிற்குத் தெரியும்.

இருப்பினும், நாங்கள் கவனத்துடனும் ஆழ்ந்த ஆலோசனையுடனும் செயல்பட வேண்டியதற்கான காரணங்கள் உள்ளன. எங்களால் செய்யக்கூடியது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிப்பது மட்டுமே. இவை போர்க்கப்பல்கள் அல்ல; ஈரானிலிருந்து சீனாவிற்குக் கச்சா எண்ணெயைக் கொண்டு சென்ற சரக்குக் கப்பல்கள் இவை.
தாக்குதலுக்குள்ளான காரணத்தினால் இந்தக் கப்பல்கள் ஏதேனும் ஒரு சூழலில் எங்கள் கடல் எல்லைக்குள் வந்தால், உடனடியாக உதவுவதற்கான தார்மீகக் கடமை எங்களுக்கு உள்ளது என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan