போரிஸ் ஜோன்சனின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் - ரஷ்யா வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீதான அதீத ஆதரவே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகியதை தொடர்ந்து பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதுவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு "போராளித்தனமான" ஆதரவிற்காக போரிஸ் ஜோன்சன் தனக்குத் தகுதியானதைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விடயத்தில் அதிக கவனம் செலுத்திய ஜோன்சன்
இது குறித்து ரொயிட்டர் செய்தி சேவையிடம் கருத்து தெரிவித்த பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதுவர் ஆண்ட்ரே கெலின் இவ்வாறு கூறியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அதே வேளையில், "புவிசார் அரசியல் சூழ்நிலையில், உக்ரைன் விடயத்தில் அதிக கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் நாடு, மக்கள், பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றை மிகவும் பின்தள்ளினார், இதுதான் இந்த முடிவைக் கொண்டுவந்துள்ளது என்று கெலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரித்தானிய பிரதமர் யாராக இருந்தாலும்,உக்ரைன் படையெடுப்பு பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தில் ரஷ்யா "அவ்வளவு விரோதம் அல்லது போர்க்குணம் இல்லாத ஒருவரை விரும்புகிறது" என்று கெலின் மேலும் கூறினார்.
நீங்கள் ஒரு ஹீரோ
இதனிடையே, ஏப்ரலில் போரிஸ் ஜோன்சன் கியேவுக்கு திடீர் விஜயம் செய்தார், படையெடுப்பிற்குப் பிறகு உக்ரேனிய தலைநகருக்குச் சென்ற ஒரு பெரிய மேற்கத்திய சக்தியின் முதல் தலைவர் ஆனார்.
முன்னதாக இன்றைய தினம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொடர்புகொண்டு பேசிய போரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம், "நீங்கள் ஒரு ஹீரோ, எல்லோரும் உங்களை நேசிக்கிறார்கள்" என்று கூறி போரிஸ் ஜோன்சன் அழைப்பை முடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.