தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவுக்கு தேசிய சபை அனுமதி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பது தொடர்பில் கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இன்று (10.08.2024) தலவாக்கலையில் தனியார் கலாச்சார மண்டபத்தில் கூடியது.
கட்சி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரன், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல்
இதன்போது கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன்,
“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளளோம்.
மேற்படி கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
மலையக மக்களுக்கு 1988 இல் ரணசிங்க பிரேமதாச ஆட்சிகாலத்தில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரே அவர்களால் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.
பிரேமதாசவின் நடவடிக்கை
அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. பிரேமதாசவின் இந்த நடவடிக்கையால்தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
எனவே, அதற்கான நன்றி கடனாகவும் நாம் சஜித்தை ஆதரிக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், நாட்டில் நல்லாட்சியே இடம்பெறவேண்டும், அதனை சஜித் பிரேமதாச செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கள்ளவர்கள் எல்லாம் இன்று அவர் பக்கமே அணிதிரண்டுள்ளனர்.
சஜித் பிரேமதாச கீழ்மட்டத்திலிருந்து வந்தவர், எனவே, அவருக்கு மக்களின் வலி, வேதனை நன்கு புரியும், அதற்கேற்ற வகையில் வகையில் உரிய முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |