விடுதலைப் புலிகளின் குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்
விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட குறிஞ்சாத்தீவு தொழிற்சாலைகளுக்கான உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இத் தொழிற்சாலை ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு அண்மையில் அமைந்துள்ளது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை பத்திரம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அத்தோடு எப்பாவல பொசுபேற் தொழிற்சாலை 26 வருடங்களாக இருந்த வழக்குகளை முடித்துள்ளதோடு, முதன் முதலாக பொசுபேற் தயாரிப்பதற்காக அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுள்ளது.
சில நாட்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து BOI க்கு வழங்கப்படவுள்ளது. மேலும் கஹட்டகஹ சுரங்கத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். குறித்த நிறுவனங்கள் அனைத்தையும் மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வரவுள்ளோம்.
செவனகல மற்றும் பெலவத்த சீனி தொழிற்சாலைகளில் கடந்த அரசாங்கம் எவ்வித சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு வற்வரி மற்றும் தொழிலாளர்களின் சேமலாப நிதி போன்றன செலுத்தவில்லை. அத்தோடு 3 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருந்தது.
இவற்றை நாங்களே செலுத்தி வருகின்றோம். ஆதலால் திடீரென பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எமது சில திட்டங்கள் மக்களுக்கு செல்ல சில காலம் எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.



