தமிழ் பொது வேட்பாளருக்கு சாதகமாகியுள்ள சுமந்திரனின் கருத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வெளியிட்ட கருத்தினால் அவருக்கு வாக்களிக்க இருந்த தமிழ் மக்கள் கூட அதற்கு எதிராக வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று(17.09.2024) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் இடம்பெற்ற பிரசார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒன்பதாவது ஜனாதிபதி
“கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலிலே 6 ஜனாதிபதிகள் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் நாங்கள் ஆதரித்த ஜனாதிபதிகளோ அல்லது நாங்கள் ஆதரிக்காத ஜனாதிபதிகளோ தமிழ் மக்களின் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வும் காண்பதற்கு முயற்சிக்கவில்லை.
இந்நிலையில் தான் நாங்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலே எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த இருக்கின்றோம்.
எங்களது இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒரே அரசியல் குரலாக எடுத்துரைக்க வேண்டும்.
இந்த தேர்தலிலே ஜனாதிபதியாக வர முடியாது என்று தெரிந்து கொண்டு நாங்கள் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கி உள்ளோம்.
ஆனால் சிலர் தமிழ் தேசியத்தின் பால் கடந்த காலத்தில் செயற்பட்டவர்கள் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களின் அடிவருடிகளாக இந்தப் பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருப்பது தாங்கள் பெற்ற வாக்குகளுக்கு அந்த வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகவே இன்று களுவாஞ்சிகுடி சந்தையிலே மக்கள் கூறிக் கொள்வதை நாங்கள் கேட்கக் கூடியதாக இருந்தது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |