இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் இலக்கு: தமிழரசு கட்சியிடம் மந்திராலோசனை
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது உள்நாட்டு பொருளாதாரத்தை இலக்கு வைத்திருந்தாலும் அண்டை நாடுகளுடனான முதலீடுகளில் தாக்கம் செலுத்தும் என்பது நோக்கத்தக்க ஒன்று.
இதில் ஆசனத்தில் அமரபோகும் ஜனாதிபதி மீது, முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பங்களிப்பும், பார்வையும் எதிர்கால இலங்கையின் முதலீடுகள், திட்டமிடல்களுக்கு முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் அறிவிக்கும் முன்னரே இலங்கையின் 4 பிரதான வேட்பாளர்களில் சிலரை இந்தியா தனது நாட்டிற்கு அழைத்தும், அல்லது முக்கிய பிரமுகர்களை இலங்கைக்கு அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்தியாவின் முதலீடு
இவை அனைத்திலும் இந்தியாவின் முதலீடுகளில் தாக்கம் செலுத்தாத வகையிலான ஆட்சி இலங்கையில் அமைய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, பெரும்பாலான அரசியல் தரப்புக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு குறித்த நிலைப்பாடுகளை வெளிபடுத்திவிட்டன. ஆனால் இந்தியாவின் முக்கிய இலக்கான வடக்கு - கிழக்கில் பிரதான அரசியல் கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு இதுவரையில் வெளியாகவில்லை.
வடக்கு - கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளர் என ஒருவரை நிலைநிறுத்திய போதும் அவருக்கான ஆதரவை அக்கட்சி வழங்கவில்லை.
இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவை போல பிரதான வேட்பாளர்கள் நால்வரையும் தமிழரசுக் கட்சியின் பிரதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழரசுக் கட்சி
அந்த நகர்வின் தொடர்ச்சியில் நேற்று முன்தினம் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து மந்திராலோசனை பெற்றுள்ளார் தமிழரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்.
அங்கு பெற்ற ஆலோசனைகளை கேட்டவுடனே ரணில் விக்கிரமசிங்கவை காண நடையை கட்டியுள்ளார்.
குறித்த தமிழரசுக் கட்சியின் எம்.பியிடம் இந்தியா விடுத்த வலியுறுத்தலானது, ஜனாதிபதி த்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் உரையாடுமாறு கோரியுள்ளது.
இதில் மறைமுகமாக அரசியல் பேரம் பேசுங்கள் என இந்தியா கூறியுள்ளமை வெளிப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் உயர்ஸ்தானிகரின் வலியுறுத்தல் அமைந்துள்ளது.
இங்கு உயர்ஸ்தானிகரிடம், மூன்று பிரதான வேட்பாளர்களும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருக்கும் பின்னணியில், அதில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் விடயங்கள், அவற்றை செயற்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த ஆவணம், 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து விளக்கிக்கூறியுள்ளார் அந்த தமிழ் எம்.பி.
பொதுவேட்பாளர் யார்
இதன்போது தனது பதிலை வழங்கிய உயர்ஸ்தானிகர், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் யார் என அவரிடம் கேட்டறிந்த பின்னர், தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் அரசியல் பேரம் பேசுங்கள் என ஏனைய கட்சிகளுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
குறித்த தமிழரசுக் கட்சி எம்.பியின் அரசியல் போக்கு சமீப ஆண்டுகளில் ரணில் - ராஜபக்ச குழாத்துடன் ஈடுபடுவதான அரசியல் விமர்சனங்களை அடுக்கியுள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவருடனும் கலந்தாலோசித்த அவர“, அதன் தொடர்ச்சியாக நாமலுடனும் பேசியுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற உயர்ஸ்தானிகரின் பேச்சுவார்த்தையின் முடிவில் ரணிலை சந்திக்க சென்ற அவர், ரணிலின் கருத்துக்களுக்கு தலைசாய்த்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை செனெட் சபை மூலமாகச் செய்வதாக ஏற்கனவே கலந்துரையாடினோம் என ரணில் வினவியபோது அதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சிலதினங்களுக்கு முன்னர், “பொது வேட்பாளரால் பயனில்லை, குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு தீங்கிழைக்க முடியும். தமிழ்த் தலைவர்களாகிய நாம் எமது அடையாளத்தை அழிக்கும் நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது என எடுத்துரைத்துள்ள அவர், தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் யாரை ஆதரிக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழீழ சுதந்திர நாடாக சர்வதேச வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிலைநிறுத்த பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என தமிழ் சமூகத்தில் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன.
தென்னிலங்கை அரசியல்
ஆனால் சர்வதேசமோ தென்னிலங்கை அரசியலிலே தனது கவனத்தை செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
அதனையே குறித்த தமிழரசுக் கட்சியின் எம்.பி நோக்குவதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் ஆர்வளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தமிழ் வேட்பாளராக ஒருவரை நிலைநிறுத்திய தமிழ் கட்சிகளே இன்று தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இதன் வெளிப்பாடுகள் அனைத்தும், பிரதிபலிப்பதென்னவோ தமிழ் மக்களின் மீதென்பதே நிதர்சனம்.
தேர்தலில் வெற்றிபெறுபவர் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கான திர்வு என்பது நிதர்சன உண்மையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |