முதுகெலும்பே இல்லாத தேர்தல் ஆணையம்! கடுமையாக சாடிய சுமந்திரன்
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக நாம் கொடுக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"தேர்தல் கூட்டங்களில் தேர்தல் இலஞ்சம், முறையற்ற அழுத்தம் என்பன தொடர்ாில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஆனால், ஆணைக்குழு எதுவும் செய்கின்றதாக இல்லை. பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கே வந்தபோது கோயில் வளாகத்திலே தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறுகின்றது எனச் சொல்லி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபோது (இதனை ஆணைக்குழுவுக்குச் சொல்கின்றேன்) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அங்கே போனார்கள்.
போனவர்களைப் பிரதமரின் காவலாளிகள் உள்ளே போக விடவில்லை. இதனால் திரும்பி வந்து விட்டீர்கள். நீங்கள் என்ன ஆணைக்குழு? உங்களையா நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவென்று அரசமைப்பையும் திருத்தி, உங்களுக்கு இத்தனை அதிகாரங்களையும் கொடுத்து வைத்திருக்கின்றோம்? ஆணைக்குழுவுக்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கான அதிகாரம் இருக்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே காவல் படை, பொலிஸ் முழுவதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் எனச் சட்டம் சொல்கின்றது - அரசமைப்புச் சொல்கின்றது.
ஆனால், அந்த அதிகாரத்தையும் பாவிக்காமல் சுயாதீன ஆணைக்குழு என்று ஒரு பெயரையும் சூட்டி வைத்துக்கொண்டு எந்தவித சுயாதீனமும் கிடையாது. இங்கே மிக முறையற்ற விதத்திலே பரப்புரைகள் எல்லாம் நடக்கின்றன. அதைத் தட்டிக் கேட்க அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை” என தெரிவித்துள்ளார்.