ஈரான் இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு: ட்ரம்ப்-ஈரான் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு!
ஈரானைச் சேர்ந்த பூரியா ஹமீதி என்ற 28 வயது இளைஞர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு காணொளி கோரிக்கையை விடுத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஆட்சியாளர்களுடன் அமெரிக்கா எந்தவிதமான அணுசக்தி அல்லது ராஜதந்திர ஒப்பந்தமும் செய்யக்கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தகைய ஒப்பந்தம் ஈரானில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் தியாகத்திற்கு செய்யும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரிழப்பு
உக்ரைன் மற்றும் பாலஸ்தீனப் போர்களை விட ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்களின் போது 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

ஈரானிய மக்களால் ஆயுதம் ஏந்திய அரசைத் தனியாக எதிர்கொள்ள முடியாது என்றும், அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால் மட்டுமே தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் "எங்களுக்கு எதிர்காலமே இல்லை. என்னால் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. நான் எனது உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்" என்று அந்த காணொளியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
ஒருபுறம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி மற்றும் பல அரசியல் விமர்சகர்களை ஈரான் அரசு சிறையில் அடைத்து வருகிறது.

இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்தே பூரியா ஹமீதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.