T20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்! இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ICC ஆடவர் T20 உலகக்கோப்பை 2026 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஸ்கேன் பரிசோதனைகளில், ஹசரங்காவுக்கு இடது காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அணியின் கோப்பை கனவு
இந்த காயத்திலிருந்து மீண்டு வர பல வாரங்கள் மறுவாழ்வு (rehabilitation) தேவைப்படுவதால், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் T20 உலகக்கோப்பை போட்டியின்போது இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது, உலகக்கோப்பையை இணைந்து நடத்தும் இலங்கை அணியின் கோப்பை கனவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மாற்றுவீரர்
ஹசரங்கா, இலங்கை அணியின் முக்கிய சகலத்துறைவீரர் மட்டுமன்றி, அணியின் பிரதான விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராகவும் கருதப்படுகிறார்.

மேலும், T20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹசரங்கா, இதுவரை 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதனிடையே, ஹசரங்காவுக்கு மாற்றாக லெக் ஸ்பின்னர் துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.