பாகிஸ்தானில் பொலிஸ் வளாகப் பள்ளிவாசல் மீது தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வளாகமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 57 பேர் காயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் நகரில் அமைந்துள்ள பொலிஸ் வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலை
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வளாகத்தின் வெளிச்சுவர் மீது மோதி வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், பொலிஸாரின் பதில் தாக்குதலில் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக மாகாணப் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தானிய தலிபான் (TTP) இயக்கம் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என அறிவித்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தே இவ்வாறான தாக்குதல்களைத் திட்டமிடுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகின்றது.