காணாமல் போனோர் துயரங்களை வெறும் பணத்தை கொடுத்து தீர்க்க முடியாது : இராமலிங்கம் சந்திரசேகர் உருக்கம்
துயரங்களிலிருந்து மீளாத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் மன உளைச்சலுக்கான தீர்ந்து விடாது. அவர்களின் உளக் காயங்களைத் தீர்க்கக்கூடிய ஒரே மருந்து அன்பு மட்டுமே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று(20.06.2026) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமலாக்கப்பட்டோரின் உத்தியோகபூர்வ அறிக்கை
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 249 காணாமல்போனவர்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இது வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்குக் கிடைத்த தரவு மட்டுமேயாகும். இதற்கு மேலும் பதியப்படாத நபர்களும் இருக்கலாம்.

எனினும், ஒரு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது சாதாரணமான விடயம் அல்ல.
இங்கு இருக்கின்ற தாய்மார்கள் இன்னமும் தங்களுடைய பிள்ளைகள் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள், இரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தீராத எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எங்களுடைய நாட்டில் நாம் இரண்டு பேரழிவான யுத்தங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். 30 வருடத்துக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றிருந்தது.
இனங்களுக்கு இடையிலே சமத்துவம்
தென்னிலங்கையிலும் கூட கடந்த 1987 - 1989ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தெற்கிலும் பெற்றோர்கள் இன்னமும் தங்கள் பிள்ளைகளைத் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்களுடைய உடல் காயங்களுக்கு எம்மால் மருத்துவம் செய்ய முடியும்.
ஆனால், அவர்களின் ஆழமான உளக் காயங்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது. அதற்கு வேறு விதமான மாற்றுத் தீர்வுகளே வழங்கப்பட வேண்டும்.

யாழ். மாவட்டத்தை ஒரு முதன்மை அபிவிருத்தி மையமாகக் கொண்டு தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது.
உண்மையான நல்லிணக்கத்துடன் இனங்களுக்கு இடையிலே சமத்துவ மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.
இனிமேலும் நாம் தமிழர்கள், சிங்களவர்கள் என்று பிரிந்து சிந்திக்காது, மனிதர்களாகச் சிந்தித்து, ஒரே தாய் மக்கள் என்று கருதும் உன்னதமான நிலைமையை இந்த நாட்டில் தோற்றுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.