பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவில் முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சத்திரச்செய்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த 16 ஆம் திகதியன்று இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்லேமன் என்ற 62 வயதுடைய ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 5 ஆண்டுகளில் அந்த சிறுநீரகம் செயலிழந்துள்ளது.
இதன்பின்னர் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பன்றியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்த இஜெனிசிஸ் நிறுவனம், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் பன்றியின் பாகங்களில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுநீரக சோதனை
இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் சிறுநீரகத்தை குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் ஒரு குரங்கு 176 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ள நிலையில் மற்றோரு குரங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழ்ந்துள்ளதை அவதானித்த பின்னரே ஆய்வாளர்கள் அத்தகைய சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு 57 வயது நிரம்பிய இதய நோயாளிக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது, இந்த அறுவை சிசிக்சையை, மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த நோயாளி இரண்டு மாதங்களில் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |