சேதனபசளை மூலம் வெற்றிகரமான விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும்: அரசாங்க அதிபர் கே.கருணாகரன்(Video)
சிறுபோக விவசாய நடவடிக்கையின்போது விவசாயிகளுக்கான உள்ளீடுகளை உரிய காலத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் மிகவும் கரிசனையாகவுள்ளதாகவும் சேதனப்பசளை மூலம் வெற்றிகரமான விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அக்கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததுடன், ஊடகவியலாளர் சந்திப்புகளையும் நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுபோக விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலான விசேட கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவற்றின் பிரதி பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்கள் மற்றும் சிறிய குளங்கள் ஊடாக இம்முறை 33800 ஹெக்ரேயரில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுமார் 32700ஹெக்ரேயர் உரம் வழங்குவதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பிரதேச செயலக ரீதியான விவசாய கூட்டங்களுக்குத் திகதிகள் தீர்மானிக்கப்படும்போது விவசாயத்திற்கான உரிய உள்ளீடுகளை வழங்கும்போதே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்து விவசாயிகள் கூட்டத்தினை பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ச்சியாக விவசாயிகளை ஏமாற்றும் வகையிலான நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முன்னெடுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள்.
கடந்த காலத்தில் விவசாய கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் விவசாயிகள் பெரும் நஷ்டங்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
உள்ளீடுகளைத் திணைக்களங்களில் வைத்துக்கொண்டு விவசாய குழுக்கூட்டங்களை நடாத்தி தீர்மானங்களை எடுப்பதன் மூலமே விவசாய நடவடிக்கைகளை ஓரளவு பாதிப்பின்றி கொண்டுசெல்லமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பசளை உட்பட உள்ளீடுகளைச் சரியான காலப்பகுதிகளில் வழங்காமல் விடுவதனால் விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் 2020, 2021ஆம் ஆண்டுக்கான நஷ்டஈடுகளே இதுவரையில் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கையினை முன்னெடுப்பது விவசாயிகளை மேலும் கஷ்டத்திற்குள் மூழ்கடிக்கும் செயற்பாடுகள் எனவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும் விவசாயிகளுக்குத் தேவையான உள்ளீடுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நடவடிக்கைகளை
முன்னெடுத்துள்ளதாகவும் விவசாயிகள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லையெனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.






