மன்னாரில் மானிய எரிபொருள் புறக்கணிப்பு : கடற்றொழில் இணையம் குற்றச்சாட்டு
மானிய எரிபொருள் விநியோகத்தின் போது விடுபட்ட, புறக்கணிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கும் எரிபொருள் வழங்க கடற்றொழில் திணைக்களம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (17.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
சீன அரசாங்கத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் தற்போது வட மாகாண ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மண்ணெண்ணெய் விநியோகம்
அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் மன்னார் , முசலி, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர் படகுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் படகு ஒன்றுக்கு 75 லீற்றர் வழங்கப்பட்டு வந்தாலும் மொத்தமாக 150 லீட்டர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் மிகுதி 75 லீட்டர் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
தற்போது வழங்கப்பட்டமை முதல் கட்டம் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும் வழங்கப்படுகின்ற எரிபொருள் உரிய கடற்றொழிலாளர்களுக்கு, கடற்றொழிலாளர் படகுகளுக்கு வழங்கப்படுவதாக இல்லை.
கடற்றொழில் திணைக்களம் உரிய நடவடிக்கை
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு கூட சில காரணங்களை வைத்து எரிபொருள் வழங்கப்படவில்லை. உரிய அதிகாரிகள் பதிவுகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் உப்புக்குளம் உள்ளடங்களாக நிறைய சங்கங்கள் எரிபொருள் விநியோக பதிவுகளில் உள்வாங்கப்படாது முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிராகரிக்கப்பட்ட சங்கங்களின் படகுகளுக்கும் விடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகுகளுக்கும் தொடர்ந்து எரிபொருளை பெற்றுக்கொடுக்க கடற்றொழில் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கண்துடைப்புக்காக செய்கிறோம் என கூறாது விடு பட்டவர்களுக்கும் , பதிவு செய்யப்படாத ஏனை கடற்றொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு கடற்றொழில் அமைச்சிற்கு நன்றிகளை தெரிவிக்துக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.
மானிய எரிபொருள் வழங்கப்படல்
மேலும் ஊடகத்தை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படாமல் தடுப்பதற்காக அல்லது
ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு எதிராக செயல்படுவதற்காக ஊடக ஒடுக்குமுறை
சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பொருளாளர் அன்ரனி சங்கரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் தற்போது மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
